கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இறங்கவே வேண்டாம்.. இந்த எளிய வழி இருக்கு!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறங்கவே வேண்டாம் ரயில் நிலையங்களைப் பயன்படுத்தலாம்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையம்
கிளாம்பாக்கம் பேருந்து முனையம்
Published on
Updated on
2 min read

வெளியூரிலிருந்து பேருந்து மூலம் கிளாம்பாக்கம் வரும் பயணிகள், மாற்று வழிகளைப் பயன்படுத்தி எளிதாக சென்னைக்குள் சென்றுவிடலாம்.

முதலில், வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகள் பாரிமுனையிலிருந்து கிளம்பின. அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டபோது, கோயம்பேட்டிலிருந்து இயக்கப்பட்டது. அது பயணிகளுக்கு மிகுந்த வசதியாக இருநத்து.

கோயம்பேட்டுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து வருவதும் போவதும் எளிதாக இருந்ததால் ஹார்ட் ஆப் சிட்டி எனப்படும் பகுதியாக கோயம்பேடு மாறியது. அதுபோல, சென்னைக்கு வரும் பேருந்துகள் புறப்படும் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் என அங்கேயே அடுத்தடுத்த இடங்களில் இருந்ததும் வசதியாக இருந்தது.

ஆனால் நாள்கள் செல்ல செல்ல அதுவே சிக்கலாக மாறியது. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்து நிலையங்கள் மாதவரம், கே கே நகர் என பிரிக்கப்பட்டது. ஆனாலும் நெரிசலுக்குத் தீர்வில்லாமல், தமிழக அரசு கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையத்தைக் கட்டித் திறந்து வைத்தது.

இதனால் போக்குவரத்து நெரிசல் வேண்டுமானால் தீர்ந்ததே தவிர, மக்களின் அவதி அதிகரித்தது. ஊருக்குச் செல்ல என்னவோ ஒரு சில மணி நேரங்கள் ஆகலாம். ஆனால் கிளாம்பாக்கம் செல்ல பல மணி நேரம் ஆகும் போல இருக்கே என்று புலம்பும் நிலையும், அதிக சுமைகளுடன் கார் புக் செய்து கிளாம்பாக்கம் செல்லவே அதிகக் கட்டணம் செலவிடும் நிலையும் ஏற்பட்டது.

இந்த நிலையில்தான், தாம்பரம் வரை இயக்கப்பட்ட தென்மாவட்டப் பேருந்துகளும் இனி கிளாம்பாக்கம் வரையே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஏதோ, ரயில் மூலம் தாம்பரம் வந்துவிட்டால் போதும் என்ற நிம்மதியும் இனி இல்லை என்றாகிவிட்டது.

எனவே, கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படும் என்ற நிலையில், தற்போது வெளியூர்களில் இருந்து வருவோர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிவிட்டு, பிறகு மற்றொரு பேருந்து பிடித்து மீண்டும் சில மணி நேரம் பயணித்து தங்கள் சொந்த ஊருக்கு அருகே இறங்கி மற்றொரு போக்குவரத்து சாதனத்தின் மூலம் வீடு செல்லும் நிலை உள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு அருகே ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதுவரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லாமல், போக்குவரத்து நெரிசலை சந்திக்காமல் சென்னைக்குள் செல்ல சில வழிகள் உள்ளன.

சில சாமர்த்தியசாலிகள் பேருந்துகளில் இருந்து கிளாம்பாக்கம் வராமல் பயன்படுத்தும் வழிகளைக் கண்டுபிடித்துவிட்டனர்.

பொதுவாகவே தென் மாவட்டப் பேருந்துகள் செங்கல்பட்டு வழியாக வருமானால், பரனூர் சுங்கச் சாவடி, பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களைக் கடந்துதான் கிளாம்பாக்கம் வருகின்றன. எனவே, இங்கெல்லாம் ரயில்நிலையங்கள் இருப்பதால், ஏதேனும் ஒரு ரயில் நிறுத்தத்துக்கு அருகே இறங்கி, நேராக ரயில் நிலையம் சென்று சென்னை எழும்பூர் அல்லது கடற்கரை அல்லது ஒருவர் செல்ல வேண்டிய பகுதிக்குச் சென்றுவிடலாம்.

இத்தனை ரயில் நிலையங்களிலும் ஏதேனும் ஒன்றை உங்கள் வசதிப்படி பயன்படுத்தலாம். பெரும்பாலானோர் இதில் பொத்தேரி ரயில் நிலையத்தை தற்போது பயன்படுத்தி வருகிறார்கள். காரணம், பேருந்துநிறுத்தம் அருகே, இந்த ரயில் நிலையம் இருப்பதுதான். அடுத்ததாக இருப்பது பரனூர் ரயில் நிலையம். இவ்விரண்டும் சற்று நெருக்கமாக இருப்பதால் பயன்படுத்திப் பார்க்கலாம். இதனால், கிளாம்பாக்கத்தில் இறங்கி மற்றொரு பேருந்தில் ஏறி போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் சென்னைக்குள் சென்றுவிடலாம் என்று ஏற்கனவே இந்த வழிகளைப் பயன்படுத்தி வரும் மக்கள் கூறுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com