
காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியும், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் 26 நாள்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சிறுமிக்கு 15 வயது ஆவதும், அவர் அங்குள்ள பள்ளியில் 10ஆம் வகுப்புப் படித்து வந்ததும், ஆட்டோ ஓட்டுநர் பிரதீப் (42) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி அதிகாலை, வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும்போது, பின்பக்க வாசல் வழியாக சிறுமி, வீட்டிலிருந்து வெளியேறியதாகவும், அதன்பிறகு, அவரது செல்போனில் அழைத்தபோது யாரும் எடுக்காமல், பிறகு சில நாள்களில் அது ஆஃப் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதே நாளில் இருந்து, அவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரதீப்பின் செல்போனும் அணைத்துவைக்கப்பட்டதால் தங்களக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
இதையடுத்து, தங்களது மகளைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு உயர் நீதிமன்றத்தில் சிறுமியின் குடும்பத்தார் மனுதாக்கல் செய்தனர். விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், அவர்களது செல்போன் கடைசியாக சுட்டிக்காட்டிய வனப்பகுதியில் தேடிப்பார்த்தபோதும் எந்த தடயமும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை, அப்பகுதியில் இருந்த ஒரு மரத்தில் இருவரும் சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து இது கொலை மற்றும் தற்கொலையா அல்லது தற்கொலையா என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.