
அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று செங்கோட்டையனிடமே கேளுங்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள், கடந்த மாதம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்திய பாராட்டு விழாவில் ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்கள் இடம்பெறவில்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் என்று கூறும் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் குறிப்பிடுவதில்லை.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமியின் அறையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
மேலும் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் அப்பாவுவை தனியாகச் சந்தித்தும் பேசியுள்ளார். இது அரசியலில் மேலும் சலசலப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில்கூட கட்சியின் முக்கிய நிர்வாகியான செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட் தாக்கலையொட்டி நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தையும் செங்கோட்டையன் தவிர்த்துள்ளார். அப்போது அவர் பேரவைத் தலைவர் அப்பாவு அறையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த இபிஎஸ், "அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தை செங்கோட்டையன் ஏன் தவிர்த்தார் என்று அவரிடமே கேளுங்கள். அவரிடம் கேட்டால்தானே தெரியும். தனிப்பட்ட முறையில் உள்ள பிரச்னைகளை இங்கு பேசாதீர்கள்" என்று கூறினார்.
மேலும், "அதிமுக சுதந்திரமாக செயல்படக் கூடிய கட்சி. திமுகவை போல் நாங்கள் யாரையும் அடிமைகளாக வைத்திருக்கவில்லை. நான் என்றும் யாரையும் எதிர்பார்த்தது கிடையாது. நான் சாதாரண தொண்டன். தலைவன் அல்ல.
அதேபோல் திமுகபோல வாரிசு அரசியலோ, குடும்பக் கட்சியோ இங்கு கிடையாது. சர்வாதிகார கட்சியும் கிடையாது. அனைவரும் இங்கு சுதந்திரமாக செயல்படலாம். எங்களுக்கு ஒரே எதிரி திமுக மட்டும்தான்.
எங்கள் கட்சி உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட எந்தத் தடையும் இல்லை. வேறு எந்தக் கட்சியிலும் இந்த சுதந்திரம் இல்லை" என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்கள், எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து செங்கோட்டையனிடம் கேட்டதற்கு, 'இதுபற்றி பேச வேண்டாம்' என்று பதிலளித்துள்ளார்.
இதனிடையே இன்று சட்டப்பேரவை நுழைவுவாயிலில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் செங்கோட்டையன் பேசியதாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையேயான கருத்து மோதல் அதிகரித்து வருவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | வேளாண் பட்ஜெட்: கரும்பு விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.