திமுகவை ஆட்சியிலிருந்து மக்கள் தூக்கி எறிவார்கள்: எல். முருகன்

திமுகவை விரைவில் ஆட்சியிலிருந்து மக்கள் தூக்கி எறிவார்கள் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.
மத்திய இணையமைச்சா் எல். முருகன்(கோப்புப்படம்)
மத்திய இணையமைச்சா் எல். முருகன்(கோப்புப்படம்)
Published on
Updated on
2 min read

திமுகவை விரைவில் ஆட்சியிலிருந்து மக்கள் தூக்கி எறிவார்கள் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடத்திய சோதனையில் சுமார் ரூ. 1,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த ஊழலை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

இந்த போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையில், கானத்தூரில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட அண்ணாமலையை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தமிழகத்தில், திமுக ஆட்சியில் டாஸ்மாக் துறையில் நடைபெற்றுள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத்துறையின் அறிக்கையால் ஆடிப்போயுள்ள திமுக அரசு, இது தொடர்பான தகவல்கள் மக்களைச் சென்றடையாமல் தடுப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது.

இந்த ஊழலை தமிழக மக்களிடத்தில் எடுத்துச் சென்று, உண்மையை அம்பலப்படுத்தி வருகிறது தமிழக பார‌திய ஜனதா கட்சி.

இதனால் ஆத்திரமடைந்துள்ள திமுக அரசு, தமிழகம் முழுவதும் பாஜகவினர் மீது வன்முறையை ஏவி வருகிறது. டாஸ்மாக் துறையில் நடைபெற்றுள்ள 1,000 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திட முயன்ற பாஜக தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பாஜக தொண்டர்கள் மீது காவல் துறையினர் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட தமிழக பாஜக-வின் மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கையில்லாத முதல்வர் ஸ்டாலின், காவல் துறையை ஏவி பாஜக போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று கனவு காண்கிறார். அறவழிப் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கியதாக சரித்திரம் இல்லை.

வரலாறு காணாத ஊழல் செய்து பணம் குவித்து, அதன் மூலம் அரசியல் செய்யும் வித்தகர்களான திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

தமிழக பாஜக மாநிலத் தலைவர் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் மீதும், முக்கிய நிர்வாகிகள் மீதும் தொடுக்கப்பட்டிருக்கும் இந்த அதிகார துஷ்பிரயோகச் செயலை உடனடியாக தமிழக காவல்துறை கைவிட வேண்டும் என்பதை கடுமையாக வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com