
கடன் வாங்கியதுதான் திராவிட முன்னேற்றக் கழக அரசின் சாதனையாக இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
”திமுக அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்போது, ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறாது. கடந்த 73 ஆண்டுகால ஆட்சியில் வாங்கப்பட்ட கடன் ரூ. 5.18 கோடி, ஆனால், திமுகவின் 4 ஆண்டுகால ஆட்சியில் வாங்கப்பட்ட கடன் ரூ. 4.53 லட்சம் கோடி ஆகும்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிதி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டது. அதில் நிபுணர்களும் பொறுப்பேற்றார்கள். இந்த குழுவின் ஆலோசனைப்படி செயல்பட்டு எவ்வளவு கடன் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த எவ்வித தகவலும் இல்லை. இந்த நிதி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்ட பிறகுதான் 4 ஆண்டுகளில் கடன் ரூ. 4.53 கோடி கடன் வாங்கியுள்ளது.
பத்திரப் பதிவு வரி, கலால் வரி போன்ற மாநில அரசுகளின் வரிவிதிப்பு மூலம் ரூ. 1.01 லட்சம் கிடைக்கிறது. இதுமட்டுமின்றி அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் மத்திய அரசிடம் இருந்து ரூ. 33,000 கோடி கூடுதலாக வரிப் பகிர்வு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன்மேல் கடன் வாங்கி, தமிழ்நாட்டு மக்களின் மீது கடனை சுமத்தியதுதான் இந்த அரசின் சாதனையாக இருக்கிறது. 25 சதவிகித பசுமை வீடுகள் கட்டவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்தனர். கரோனா காலம் என்பதால்தான் பணியை முடிக்க முடியவில்லை.
புதிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் குறித்த வெள்ளை அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. 100 நாள் வேலைத்திட்டத்தில் பணி செய்த மக்களுக்கு நிதி அளிக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள், ஆனால் நாடாளுமன்றத்தில் அதற்கான அழுத்தத்தை கொடுக்கவில்லை.
மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதுதான் எங்கள் குறிக்கோள். திமுக இரண்டாக பிளவுபட்டபோது, அறிவாலயத்துக்கு பாதுகாப்பு அளித்ததுதான் அதிமுக அரசு.
எங்கள் அலுவலகத்துக்குள் நுழைந்து ரெளடிகள் அடித்து நொறுக்கியபோது, அலுவலகத்துக்கு பாதுகாப்பு அளிக்காமல் ரெளடிகளுக்கு பக்கபலமாக இருந்ததுதான் திமுக அரசு” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.