கோவை - திருப்பூர் எல்லை வெடிமருந்து ஆலையில் பயங்கர விபத்து

மல்லேகவுண்டம்பாளையத்தில் இயங்கி வரும் வெடிமருந்து ஆலையில் இன்று (மே 5) பிற்பகல் பயங்கர வெடி விபத்து.
கோவை - திருப்பூர் எல்லை வெடிமருந்து ஆலையில் பயங்கர விபத்து
Updated on
1 min read

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியான சுல்தான்பேட்டை அருகே மல்லேகவுண்டம்பாளையத்தில் இயங்கி வரும் வெடிமருந்து ஆலையில் இன்று (மே 5) பிற்பகல் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

உத்தரகாண்டைச் சேர்ந்த ராஜ் என்பவருக்குச் சொந்தமான இந்த ஆலை, ராணுவத்திற்கு தோட்டா தயாரிக்கும் வெடிமருந்து உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இன்று பிற்பகல் 1 மணியளவில், ஆலையில் வெடிமருந்து இருப்பு வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு, அந்த கிடங்கை முற்றிலுமாக தரைமட்டமாக்கியது.

இந்த வெடிப்பின் சத்தம் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தை அடுத்து, காமநாயக்கன்பாளையம் மற்றும் சுல்தான்பேட்டை காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தீயணைப்புத் துறையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலைக்குள் காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தவிர வேறு யாருக்கும் நுழைய அனுமதி இல்லை. அதிருஷ்டவசமாக, விபத்து நடந்தபோது ஆலையில் பணியில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர்.

இருப்பினும், உயிரிழப்பு ஏற்பட்டதா?, எவ்வளவு அளவு வெடிமருந்து வெடித்தது? என்பது குறித்த விவரங்கள் காவல்துறை விசாரணைக்கு பிறகே தெரியவரும்.

இந்த வெடி விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆலையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து சுல்தான் பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com