
சென்னை வியாசர்பாடி தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகள் வழங்கி வருவதாக தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை மாவட்டம் பெரம்பூர் வட்டம். பெருநகர சென்னை மாநகராட்சி. 4-வது மண்டலம், 37-வது வார்டுக்குட்பட்ட வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரில் 26.05.2025 (திங்கட்கிழமை) அன்று மாலை சுமார் 5 மணி அளவில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு நிலையங்களான வஉசி நகர், கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, வன்னியம்பதி, பேசின் பிரிட்ஜ் எஸ்பிலனேடு, கொளத்தூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீ அணைக்கப்பட்டது.
பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், மாநகராட்சி உயர் அலுவலர்கள், வருவாய்த்துறை, காவல்துறை, மின்சாரத்துறை மற்றும் பல்வேறு துறைகள் சார்பில் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்தனர். இதனைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்ட குடிசை பகுதிகளில் வசித்த மக்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள உதயசூரியன் நகரில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளி வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பத்திரமாக தங்க வைக்கப்பட்டனர்.
முதல்வரின் உத்தரவின்படி 27.05.2025(செவ்வாய்க்கிழமை) அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மாநகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்ட நபர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் ஆகியோர் தீ விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, உடனடி நிவாரணமாக பாதிக்கப்பட்ட 24 நபர்களுக்கு ரூ. 5,000 ரொக்கம், 10 கிலோ அரிசி, துண்டு, லுங்கி, பக்கெட், மக், பாய் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாமும் நடைபெற்றது. சம்பவ நாள் முதல் சென்னை மாநகராட்சியால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இன்று (29.05.2025) வியாசர்பாடி, சென்னை மாநகராட்சி பள்ளியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் ரூ. 8,000 ரொக்கமும். 10 கிலோ அரிசி, வேஷ்டி, புடவையும் திமுக சார்பில் ரூ. 42,000 ரொக்கமும், 26 கிலோ அரிசி, பெட்ஷீட், புடவை, லுங்கி, இரவு உடை மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சேகர்பாபு, மேயர்பிரியா உள்ளிட்டோர் வழங்கினர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தீ விபத்து நடந்த அன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவச் சென்ற தவெக பெண் நிர்வாகிகளை காவல் துறையினர் தாக்கியதற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.