

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்பட 20 கட்சிகள் கலந்துகொள்ளவில்லை.
பிகாரைத் தொடர்ந்து, தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடங்கப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள், நாளை மறுநாள் (நவ. 4) முதல் தொடங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாகச் செய்யக் கூடாது என்றும், கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும் எனவும், நடைமுறைச் சிக்கல்கள் இல்லாமல் செய்ய வேண்டும் என்றும், ஏப்ரல் மாதம் தேர்தலை வைத்துக் கொண்டு இப்போது இதனைச் செய்ய தொடங்குவது சரியானது அல்ல. முறையானது அல்ல என்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதனால், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மொத்தமாக 64 கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது.
இந்த நிலையில், சென்னை தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் அனைத்துக்கட்சிக் கூட்டம் காலை 10 மணிக்குத் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி, அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநிலக் காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட 20 கட்சிகள் புறக்கணித்துள்ளன.
திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் செல்வப்பெருந்தகை, திருமாவளவன், வைகோ, கமல்ஹாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் சண்முகம், வீரபாண்டியன், கி.வீரமணி, ஜவாஹிருல்லா, தனியரசு திமுக கூட்டணியில் அல்லாத தேமுதிக தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.