

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுவை மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை தேவை என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 35 மீனவர்களை, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைது செய்தது.
அத்துடன் மீனவர்களின் 3 விசைப்படகுகள், ஒரு நாட்டுப் படகையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் மீனவச் சகோதரர்கள் 35 பேர், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மன வேதனையை அளிக்கிறது.
கைது செய்யப்பட்டுள்ள நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும். மற்ற மாநில மீனவர்கள் மீது காட்டும் அக்கறையைப் போலவே எங்கள் மீனவர்கள் மீதும் காட்டி, இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும்.
மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல், உண்மையாகத் தர வேண்டும். இனி இதுபோல நடக்காமல் இருக்க, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை மத்திய அரசும் தமிழக அரசும் காண வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அழுத்தமாக வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.