கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை: மூவரை அடையாளம் கண்டது எப்படி? காவல் ஆணையர் தகவல்

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் மூவரை அடையாளம் கண்டது எப்படி? என்று காவல் ஆணையர் விளக்கம்
கோவை காவல் ஆணையர்
கோவை காவல் ஆணையர்
Published on
Updated on
1 min read

கோவை: கோவையில், கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்று பேரை துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்தது ஏன் என்பது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம் கொடுத்துள்ளார்.

கோவை விமான நிலையம் அருகே நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் மூவரை, துப்பாக்கிச் சூடு நடத்தி போலீசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நேற்று முன்தினம் இரவு கோவை விமான நிலையம் அருகே நடந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் சேகரித்த தடயங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் துடியலூர் அருகே வெள்ளலூரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

அவர்களை கைது செய்ய முயன்றபோது,போலீசாரை தாக்கி தப்ப முயன்றனர். இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக குறைந்தபட்ச ஆயுதமாக துப்பாக்கியைப் பயன்படுத்தி கால்களில் சுட்டனர். அதில் காளீஸ்வரன் மற்றும் கருப்பசாமி எனும் சதீஷ் இருவருக்கு தலா இரண்டு புல்லட்டுகளும் தவசிக்கு ஒரு புல்லட்டும் பாய்ந்து காயம் ஏற்பட்டது.

பின்னர் மூவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் (30), அவரது தம்பி காளீஸ்வரன் (21) மற்றும் உறவினர் தவசி (20) என தெரியவந்தது. மூவரும் 10 வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்து இருகூரில் தங்கி கட்டடப்பணி மற்றும் மரம் வெட்டுதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இவர்கள் மீது முன்னதாகவே கொலை, திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் பதிவாகியுள்ளன. அண்மையில் சத்தியமங்கலத்தில் நடந்த திருட்டு வழக்கில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் நடந்த இரவு மூவரும் இருகூரில் மது அருந்திய பின்னர் மீண்டும் மது வாங்கிக் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்து கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர். ஆண் நண்பரை அரிவால் போன்ற ஆயுதத்தால் தாக்கி, காரின் கண்ணாடியையும் உடைத்துள்ளனர்.

போலீசார் நூற்றுக்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து, தடயங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் குற்றவாளிகளை மடக்கி பிடித்தனர்.

இவர்களுக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் முன்பு எந்தவித தொடர்பும் இல்லையெனவும், திட்டமிட்டு தாக்கியதல்ல எனவும் விசாரணையில் தெரியவந்தது.

இவர்கள் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கோவை மாநகர துணை ஆணையர் கார்த்திகேயன் உடன் இருந்தார்.

Summary

Police Commissioner explains how the three were identified in the Coimbatore gang rape incident

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com