

திருநெல்வேலி: திருநெல்வேலியில் மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்த நிலையில், நண்பரைக் கத்தியால் குத்திக் கொன்ற ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி, இட்டேரி சீனிவாசா அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் அப்பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவரிடம் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு பெருமாள்புரம் அருகேயுள்ள திருமால் நகர் டாஸ்மாக் கடைக்கு, தனது நண்பரான மகிழ்ச்சி நகரைச் சேர்ந்த செல்வம் என்பவருடன் சென்று மது அருந்தியுள்ளார்.
கொலையில் முடிந்த வாக்குவாதம்
இருவரும் மது அருந்திக்கொண்டிருந்தபோது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வம், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலகிருஷ்ணனை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணன், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக பாலகிருஷ்ணனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். எனினும், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்தக் கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த பெருமாள்புரம் காவல்துறையினர், உடனடியாக நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து, கொலையில் ஈடுபட்ட செல்வத்தை உடனடியாகக் கைது செய்தனர்.
காவல்துறை நடத்திய முதல்கட்ட விசாரணையில், “பாலகிருஷ்ணனுக்கும் செல்வத்திற்கும் இடையே எந்தவித முன்விரோதமும் இருந்ததாகத் தெரியவில்லை. மதுபோதையில் ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரத்தில் செல்வம் இந்தக் கொலையைச் செய்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களுக்குள் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிவடைந்த இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.