

மிரட்டலின் பேரில் ஜாய் கிரிசில்டா உடன் திருமணம் நடைபெற்றதாக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
ஜாய் கிரிசில்டாவின் புகாரை மாநில மகளிர் ஆணையம் விசாரித்த நிலையில், அவரைத் தான் திருமணம் செய்ததாகவும், அவரது குழந்தையின் தந்தை என்றும் மகளிர் ஆணையத்தின் விசாரணை முன்பாக மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார்.
இதனிடையே, மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று காவல்துறை ஆணையருக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஆணையத்தைப் பரிந்துரைத்து மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியது.
அதுமட்டுமின்றி, வழக்கு முடியும்வரையில் குழந்தையின் பராமரிப்புச் செலவையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மகளிர் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.
இது தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது:
”மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை.
நான் ஜாய்யை தன்னிச்சையாக (under free will) திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன். ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது.
செப்டம்பர் 2025 இல், ஆயிரம் விளக்கு, மகளிர் காவல் நிலையத்தின் புலனாய்வு அதிகாரி முன்பும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் விரிவான வாக்குமூலங்களை நான் ஏற்கனவே அளித்துள்ளேன், இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.
கமிஷனின் முன் நடந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போது, ஜாய் எனக்கு மாதத்திற்கு ரூ.1,50,000/- பராமரிப்புத் தொகையாகவும், தனது பிஎம்டபள்யூ(BMW) காருக்கு ரூ.1.25 லட்சம் மாதாந்திர இஎம்ஐ-யையும் செலுத்த வேண்டும் என்றும் கோரினார், நான் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன்.
நான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை, மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால்(DNA Test), அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளேன். இந்த வாக்குமூலம் ஏற்கனவே ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரி முன் செப்டம்பர் 2025 அன்றே பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை. அந்த பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன், மேலும் உண்மையை நிறுவ அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன். ஆணையத்தின் முன் நடந்த அனைத்தும் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: தீயவர் குலை நடுங்க வெளியீட்டுத் தேதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.