கோவையில் இளம் பெண் கடத்தப்பட்டதாக சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், மாநகரக் காவல் ஆணையர் சரவணசுந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை இருகூர் தீபம் நகர் பகுதியில் சென்றுகொண்டிருந்த பெண்ணை, நேற்று மாலை வெள்ளை நிற காரில் வந்த சிலர், வலுகட்டாயமாக இழுத்துக் காரில் ஏற்றிச் சென்றதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.
இதுதொடர்பாக, சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை காவல் ஆணையர் சரவணசுந்தர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:
”இருகூர் விவகாரத்தில் வெள்ளை நிற காரில் பெண் ஒருவர் சப்தம் போட்டு சென்றதாக, அப்பகுதியைச் சேர்ந்த எப்ண் காவல்துறை அவசர உதவி எண் 100 -க்கு தகவல் அளித்தார்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சூலூர் பகுதியிலிருந்து ஏஜி புதூர் பகுதிவரை வந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள பேக்கரி கடையின் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றியுள்ளோம். அதில் காரின் எண் தெளிவாக இல்லை.
அந்த சிசிடிவி காட்சியில் காருக்குள் பெண் இருந்ததற்கு எந்த ஒரு பதிவும் தெளிவாக இல்லை. இது சம்பந்தமாக தற்போது வரை புகார் எதுவும் வரவில்லை.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். வாகன எண் தெளிவாகத் தெரிந்ததும் அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.