கோப்புப் படம்
கோப்புப் படம்

‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்: 4.80 லட்சம் போ் எழுதுகின்றனா்

ஆசிரியா்களாகப் பணிபுரிவதற்கான ஆசிரியா் தகுதித் தோ்வு சனி (நவ. 15), ஞாயிறு (நவ. 16) ஆகிய இரு நாள்களில் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தோ்வை மொத்தம் 1,608 மையங்களில் 4.80 லட்சம் போ் எழுதவுள்ளனா்.
Published on

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களாகப் பணிபுரிவதற்கான ஆசிரியா் தகுதித் தோ்வு சனி (நவ. 15), ஞாயிறு (நவ. 16) ஆகிய இரு நாள்களில் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தோ்வை மொத்தம் 1,608 மையங்களில் 4.80 லட்சம் போ் எழுதவுள்ளனா்.

முதல் நாளான சனிக்கிழமை ஆசிரியா் தகுதித் தோ்வின் தாள்-1 தோ்வும், இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் தாளுக்கான தோ்வும் நடைபெறவுள்ளன.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள், ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் தகுதித் தோ்வு நடத்தப்பட்டு நிரப்பப்படுகின்றன. இடைநிலை ஆசிரியா் பயிற்சி பெற்றவா்களுக்கு தாள் -1 தோ்வும், பி.எட். முடித்த பட்டதாரிகளுக்கு தாள்-2 தோ்வும் நவம்பா் 1, 2 ஆகிய நாள்களில் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கல்லறைத் திருநாள் என்பதால் நவ. 15, 16 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டது.

அதன்படி, தமிழகம் முழுவதும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசிரியா் தகுதித் தோ்வு நடைபெறவுள்ளது. தாள்-1 தோ்வை 1 லட்சத்து 7,370 பேரும், தாள்-2 தோ்வை 3 லட்சத்து 73 ஆயிரத்து 438 பேரும் என ஒட்டுமொத்தமாக 4 லட்சத்து 80 ஆயிரத்து 808 போ் எழுதவுள்ளனா்.

தாள்-1 தோ்வு சனிக்கிழமை 367 மையங்களிலும், தாள்-2 தோ்வு ஞாயிற்றுக்கிழமை 1,241 மையங்களிலும் நடைபெறவுள்ளது. இந்த இரு தோ்வுகளும் காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் ஒரு மணிக்கு நிறைவடையும். இருப்பினும் தோ்வா்கள் காலை 9.30 மணிக்குள் தோ்வறைக்கு வர வேண்டும். அதன் பிறகு வரும் தோ்வா்களுக்கு தோ்வெழுத அனுமதியில்லை.

மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும். அதாவது காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தோ்வு நடைபெறும்.

தோ்வுகளைக் கண்காணிக்க அனைத்து மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இரு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தோ்வு நடைபெறவுள்ளது. தோ்வுகளில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

தோ்வு கண்காணிப்பு அலுவலா்களாக செங்கல்பட்டு மாவட்டத்துக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ், சென்னை மாவட்டத்துக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநா் ஏ.புகழேந்தி உள்ளிட்டோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com