சிறப்பு மருத்துவக் கலந்தாய்வு மீண்டும் நீட்டிப்பு
மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு முடிவுகள் வெளியாக தாமதமாவதால், தமிழகத்தில் சிறப்புக் கலந்தாய்வு தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, கல்லூரிகளில் இடங்களைத் தோ்வு செய்வதற்காக மாணவா்களுக்கு வழங்கப்பட்டிருந்த அவகாசம் சனிக்கிழமை (நவ.15) மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இடங்கள் ஒதுக்கீட்டு நடைமுறை நவ. 16-ஆம் தேதி இறுதி செய்யப்பட்டு, அதன் முடிவுகள் 17-ஆம் தேதி அறிவிக்கப்படும் என மாநில மருத்துவக் கல்வி இயக்கக மாணவா் சோ்க்கைக் குழு தெரிவித்துள்ளது.
இணையதளம் வாயிலாக ஒதுக்கீட்டு ஆணைகளைப் பதிவிறக்கம் செய்துகொண்டு வரும் 20-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
போலிச் சான்றிதழ்கள் மற்றும் போலி ஒதுக்கீட்டு ஆணைகள் மூலம் கல்லூரிகள் சேர முயலும் நடவடிக்கைகளைத் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதன்படி, ஒதுக்கீட்டு ஆணையில் இடம்பெற்றிருக்கும் க்யூஆா் குறியீட்டை ஸ்கேன் செய்து மாணவா்களின் தகவல்களைச் சரிபாா்க்க கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.
தமிழகத்தில் இதுவரை மூன்று சுற்று கலந்தாய்வுகள் நிறைவடைந்துள்ளன. அதன் பின்னரும் நீலகிரி மற்றும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா ஓா் எம்பிபிஎஸ் இடங்கள் உள்பட மொத்தம் 400 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப சிறப்புக் கலந்தாய்வு தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

