புயல் சின்னம்: இன்று 4 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை!
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் கடலூா், மயிலாடுதுறை, திருவாரூா், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை(நவ.16) மிக பலத்த மழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் இலங்கை மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சனிக்கிழமை (நவ.15) காலை இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இது ஞாயிற்றுக்கிழமை(நவ.16) காலை மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகா்ந்து செல்லக்கூடும். இதன்காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (நவ. 16) முதல் நவ. 21- ஆம் தேதி வரை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
பலத்த மழைக்கான மாவட்டங்கள்: மேலும், கடலூா், மயிலாடுதுறை, திருவாரூா், நாகை ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 16) மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபோல, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களில் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து, திங்கள்கிழமை(நவ.17) காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், மிக பலத்த மழையும், சென்னை, திருவள்ளூா், கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை( நவ.15) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும், அதிகபட்ச வெப்பநிலை 91 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 80 மி.மீ. மழை பதிவானது. ஊத்து (திருநெல்வேலி), ராதாபுரம் (திருநெல்வேலி), காயல்பட்டினம் (தூத்துக்குடி)- தலா 70 மி.மீ, நாலுமுக்கு (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி)-தலா 60 மி.மீ, மாஞ்சோலை (திருநெல்வேலி), பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி)- தலா 50 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை:தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

