20களில் திருமணம் செய்யுங்கள்! - ராம்சரண் மனைவி உபாசனாவின் கருத்துக்கு ஸ்ரீதர் வேம்பு பதில்

நடிகர் ராம்சரண் மனைவி உபாசனாவின் கருத்துக்கு ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதில்
Zoho Sridhar Vembu Advises Youngsters To Marry, Have Kids In Their 20s
ராம்சரண், மனைவி உபாசனா | ஸ்ரீதர் வேம்பு
Published on
Updated on
1 min read

இளைஞர்கள் தங்களுடைய 20களிலே திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொளுங்கள் என இளைஞர்களுக்கு ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அறிவுறுத்தியுள்ளார்.

நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனாவின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் ஸ்ரீதர் வேம்பு இந்த பதில் கருத்தைக் கூறியுள்ளார்.

நடிகர் ராம் சரணின் மனைவியும் யும் அப்போலோ நிர்வாகத்தின் துணைத் தலைவருமான உபாசனா, தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், "ஹைதராபாத்தில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் மாணவர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

'எத்தனை பேர் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்டபோது மாணவிகளைவிட பெரும்பாலான மாணவர்கள் கை தூக்கி தங்களது விருப்பத்தைத் தெரிவித்தனர். மாணவிகள் அதிகமாக தங்கள் கல்வி மற்றும் வேலையில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதுதான் புதிய முற்போக்கான இந்தியா.

தொலைநோக்குப் பார்வையை அமைத்துக்கொள்ளுங்கள். உங்கள் இலக்குகளை வரையறுத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய பணியில் ஈடுபாடு இருக்கும்போது உங்களை யாரும் தடுக்க முடியாது" என்று பெண்களுக்கு ஆதரவாக, பெண்களை ஊக்குவிக்கும் விதமாக பதிவிட்டிருந்தார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள விடியோவில்,

"பெண்களின் மிகப்பெரிய காப்பீடு உங்களுடைய கருமுட்டைதான். உங்களுடைய கருமுட்டையை பாதுகாத்து வையுங்கள். நீங்கள் எப்போது திருமணம் செய்ய வேண்டுமோ எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமோ அப்போது செய்யுங்கள். அதை நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். முன்னதாக நிதி சார்ந்து பிறரைச் சார்ந்திருக்காத நிலைக்கு வாருங்கள். இன்று நான் என் சொந்தக்காலில் நிற்கிறேன். என்னுடைய பணி எனக்கு நம்பிக்கையையும் பாதுகாப்பையும் தருகிறது.

உங்கள் 30களை எட்டும் முன்பாக உங்களுடைய குறிக்கோளை அடையுங்கள்" என்று மாணவ, மாணவிகள் மத்தியில் பேசியிருந்தார்.

இதனைப் பகிர்ந்துள்ள ஸ்ரீதர் வேம்பு, உபாசனாவின் பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில்,

"நான் சந்திக்கும் இளம் தொழில்முனைவோர்கள் அதாவது ஆண்கள், பெண்கள் இருவருமே அவர்களது 20களில்(20- 29 வயது) திருமணம் செய்துக்கொண்டு குழந்தைகளையும் பெற்றுக்கொள்ளவும் திருமணம் மற்றும் குழந்தை பெற்றலைத் தள்ளிப்போடாமல் இருக்கவும் நான் அறிவுறுத்துகிறேன்.

சமூகத்திற்கும் தங்கள் மூதாதையர்களுக்கும் மக்கள்தொகைக்கான கடமையைச் செய்ய வேண்டும் என்று நான் அவர்களிடம் கூறி வருகிறேன். இந்தக் கருத்துக்கள் விசித்திரமாகவோ அல்லது பழமையானதாகவோ தோன்றலாம், ஆனால், இந்தக் கருத்துக்கள் மீண்டும் எதிரொலிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

திருமணமா, வேலையா? என சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Summary

Zoho Sridhar Vembu Advises Youngsters To Marry, Have Kids In Their 20s

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com