

குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நேற்று (22-11-2025) மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று (23-11-2025) காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்ற 24-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இதனைத் தொடர்ந்து குமரிக்கடல் பகுதிகளில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது.
"நேற்று (22-11-2025) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது இன்று (23-11-2025) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக 25-ஆம் தேதி வாக்கில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(நவ. 23) நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர் மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை(நவ. 24) நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர். நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக(மஞ்சள் எச்சரிக்கை) வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.