

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக, 11 லட்சத்து 40 ஆயிரத்து 731 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் உறுதிசெய்யப்பட்டு, நேரடியாகவும், மறைமுகமாகவும் 34 இலட்சம் பேருக்கும் மேல், வேலைவாய்ப்புகள் பெறுவதை உறுதி செய்திருக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 25) கோயம்புத்தூரில் நடைபெற்ற “TN Rising” முதலீட்டாளர்கள் மாநாடு 2025-ல் ஆற்றிய உரையில் தெரிவித்திருப்பதாவது:
தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாமல், சிறிய அளவிலும், பெரிய அளவிலும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, தமிழ்நாட்டில் இருக்கின்ற வாய்ப்புகளை எடுத்துச் சொல்லி, முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறோம்.
U.A.E. - சிங்கப்பூர் - ஜப்பான் - ஸ்பெயின் - அமெரிக்கா - ஜெர்மனி - இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் நானே நேரடியாக சென்று பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களை எல்லாம் சந்தித்து, தமிழ்நாட்டில் Invest செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறேன்.
இப்படி நடத்தப்பட்ட 17 முதலீட்டாளர்கள் மாநாட்டின் விளைவாக இதுவரைக்கும், ஆயிரத்து 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆட்சிக்காலத்தின் கடைசி நான்கு ஆண்டுகளைவிட இரண்டரை மடங்கு அதிகம்!
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக, 11 இலட்சத்து 40 ஆயிரத்து 731 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் உறுதிசெய்யப்பட்டு, நேரடியாகவும், மறைமுகமாகவும் 34 இலட்சம் பேருக்கும் மேல், வேலைவாய்ப்புகள் பெறுவதை உறுதி செய்திருக்கிறோம்!
எத்தனையோ மாநிலங்கள் இருக்கிறது… எத்தனையோ அரசுகள் இருக்கிறது… அவர்களும் கூட, அவர்கள் மாநிலம் வளர வேண்டும் என்று முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துகிறார்கள்… புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுகிறார்கள்… ஆனால், அதன் ‘கன்வெர்ஷன் ரேட்’ என்ன? எத்தனை ஒப்பந்தங்கள் தொழிற்சாலைகளாக மாறுகிறது? அதற்குள் நான் போக விரும்பவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும், Conversion Rate 80 Percent! நம்முடைய திராவிட மாடல் அரசில் போடப்பட்டிருக்கின்ற ஆயிரத்து 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், நிலம் வழங்குவது - வணிக உற்பத்தி - சோதனை உற்பத்தி - கட்டுமானம் தொடங்கப்பட்டது என்று 809 திட்டங்கள், பல்வேறு செயல்பாட்டு நிலைகளில் இருக்கிறது!
அதுமட்டுமல்ல, புது ஐடியாவோடு இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வந்தாலும், இந்த திராவிட மாடல் அரசு, அவர்களுக்கும் Support-ஆக இருக்கிறது! கடந்த மாதம் கூட இதே கோவைக்கு வந்து, உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தேன். அதில் பங்கேற்ற இளைஞர்கள், எந்த அளவிற்கு திராவிட மாடல் அரசு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது என்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில் சொல்லியிருந்தார்கள்.
45-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, 30 ஆயிரம் பேருக்கு மேல், அந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.
அதுமட்டுமல்ல, சிறிய சிறிய நகரங்களுக்குக் கூட சென்று, StartUp TN மூலமாக இளைஞர்களை தொழில் தொடங்க ஊக்குவிக்கிறோம்! அதனால், இப்போது தமிழ்நாட்டில் இருக்கின்ற StartUp நிறுவனங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 12 ஆயிரத்து 663... 2021 மே வரை, 2 ஆயிரத்து 146 நிறுவனங்கள்தான் இருந்தது. நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில், 12 ஆயிரத்து 663 என்ற வரலாற்று உயரத்தை தொட்டிருக்கிறோம்.
இத்தனை நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவதற்குக் காரணம் என்ன? வெளிப்படைத் தன்மையுடன் இந்த அரசு செயல்படுகிறது! திறன் மிக்க, படித்த இளைஞர்கள் இங்கே இருக்கிறார்கள்! ‘பிசினஸ் ஃபிரண்ட்லி’ சூழல் இங்கே நிலவுகிறது! சட்டம் ஒழுங்கு இங்கு சரியாக இருக்கிறது!
தமிழ்நாட்டின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள், அரசியல் காரணங்களுக்காக தவறான டேட்டாவையும், தவறான நியூசையும் பரப்புகிறார்கள். ஆனால், உண்மையான டேட்டாவை சொல்கிறேன்… நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 62 ஆயிரத்து 413 நிறுவனங்கள் இருந்த தமிழ்நாட்டில், இப்போது, 79 ஆயிரத்து 185 நிறுவனங்கள் இருக்கிறது. அதாவது, 16 ஆயிரத்து 772 நிறுவனங்கள் அதிகரித்திருக்கிறது!
புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு P.F. கணக்கு தொடங்கி அதை பராமரிக்கின்றது ஒன்றிய அரசு! அதன்படி நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, 29 இலட்சத்து 64 ஆயிரம் பணியாளர்கள் அதிகரித்திருப்பதாக டேட்டாவை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்! இதைவிட தொழில் வளர்ச்சியில், தமிழ்நாடு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதற்கு டேட்டா தேவையா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.