

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேரில் சந்தித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், கட்சியின் மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன், சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை புதன்கிழமை காலை நேரில் சந்தித்து எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார்.
இந்த நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வருகைதந்துள்ளார்.
விஜய்யுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தும் செங்கோட்டையன், நாளை காலை அதிகாரப்பூர்வமாக விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரே தொகுதியில் அதிகம் முறை (8 முறை வென்றார்) போட்டியிட்டு வென்றவர் என்ற பெருமைக்கு உரியவரான செங்கோட்டையன், கொங்கு மண்டலத்தின் வாக்குகளைக் கவருவதில் முக்கிய நபராக அறியப்பட்டு வருகிறார்.
அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியதில் இருந்து அக்கட்சியின் எம்எல்ஏவாக இருந்து வந்த செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைப்பதில் திறன் மிக்கவராக அறியப்பட்டார்.
ஓபிஎஸ் - இபிஎஸ் பிரிந்துள்ள நிலையில், கட்சி ஒருங்கிணைப்பு குறித்து பேசியதால் அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி நீக்கியிருந்தார்.
தற்போது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் இணையவுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் மூத்த அரசியல் தலைவர் இல்லாதது பெரும் பின்னடைவாக இருந்துவரும் நிலையில், செங்கோட்டையனின் வருகை அக்கட்சிக்கு வலுசேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.