தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக அடுத்த 12 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல், இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புதன்கிழமை (நவ. 26) காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு இலங்கை, இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவியது.
இது புதன்கிழமை நள்ளிரவு வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, அடுத்த 12 மணிநேரத்தில் புயலாக வலுப்பெற்று, வடதமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த டிட்வா என்ற பெயர் சூட்டப்படும்.
வெதர்மேன் கணிப்பு
தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டிருக்கும் கணிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
“இந்த புயல் சின்னத்தால் டெல்டா பகுதி முதல் சென்னை வரை 99 சதவீதம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவ. 29 மற்றும் 30 ஆம் தேதி நாகை முதல் சென்னை வரை கனமழை பொழியும். நகர்வதில் தாமதம் ஏற்பட்டால் டிச. 1 ஆம் தேதியும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
வடகிழக்கு பருவமழையின் நவம்பர் மாதத்தின் சராசரியை எட்ட சென்னைக்கு இந்த புயல் சின்னம் மிகவும் முக்கியம் வாய்ந்தது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.