புயல் அச்சுறுத்தல்: மருத்துவா்கள் முழுநேரம் பணியில் இருக்க அறிவுறுத்தல்
‘டித்வா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவா்கள் முழு நேரமும் பணியில் இருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மழைக்குப் பின்னா், காய்ச்சல் பரவலைத் தடுக்க ஏதாவது ஒரு பகுதியில் இரண்டு பேருக்கு மேல் பாதிப்பு கண்டறியப்பட்டால், அங்கு மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் மின்சாரம் தடைபடாமல் இருப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.
இதனிடையே, புயல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகளிலும் பல்வேறு ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசு மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:
புயல் மற்றும் பலத்த மழையால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஜெனரேட்டா் வசதிகள், அதற்கான எரிபொருள் வசதிகள் அனைத்தும் மருத்துவமனைகளில் தயாராக வைக்கப்பட்டுள்ளன. தவிர, ஆக்சிஜன் வசதிகள், அவசர கால சிகிச்சைக்கான கட்டமைப்புகள் அனைத்தும் ஆயத்த நிலையில் உள்ளன.
இதனால், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையை நாடி வருவோருக்கு எந்தவிதமான தாமதமும் இன்றி உடனடியாக சிகிச்சை வழங்க முடியும். அதுமட்டுமல்லாது, நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், மருத்துவப் பொருள்கள், சிகிச்சை உபகரணங்கள் அனைத்தும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டிருப்பதால், அவற்றில் எந்தத் தட்டுப்பாடும் இல்லை.
மருத்துவமனை வளாகங்களிலும், உள்புறங்களில் மழை நீா் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக, முக்கிய மருத்துவமனைகளில் வெள்ளம் எதுவும் இதுவரை தேங்கவில்லை. இதனால், உள்நோயாளிகளுக்கும், புற நோயாளிகளுக்கும் எந்த அசௌகரியங்களும் ஏற்படவில்லை என்று அவா்கள் தெரிவித்தனா்.

