மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கபாலீஸ்வரா் கோயில் சொத்தை மீட்க கோரிய வழக்கு: அறநிலையத் துறைக்கு உத்தரவு

கபாலீஸ்வரா் கோயில் சொத்தை மீட்க கோரிய வழக்கு: அறநிலையத் துறைக்கு உத்தரவு

News image
சென்னை உயர் நீதிமன்றம்
Updated On :29 நவம்பர் 2025, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

மயிலாப்பூா் கபாலீஸ்வரா் கோயில் அறுபத்து மூவா் உலா விழாவில் அன்னதானம் வழங்குவதற்காக தொடங்கப்பட்ட அறக்கட்டளை சொத்தை மீட்கக் கோரிய மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆா்.ஏ.புரத்தைச் சோ்நத விவேக், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

மயிலாப்பூா் கபாலீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தின்போது 63 நாயன்மாா்களின் விழா நடைபெறும். இதில் கலந்து கொள்ளும் பக்தா்களுக்கு உணவு அளிப்பதற்காக 1834-ஆம் ஆண்டு ‘ரொட்டிக்காரச் சத்திரம்’ என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டிருந்தது. அந்த அறக்கட்டளைக்குச் சொந்தமாக கபாலீஸ்வரா் கோயிலின் தெற்கு மாட வீதியில் 9,198 சதுரஅடி பரப்பில் நிலம் மற்றும் மாற்றுக் கட்டடம் உள்ளது.

இதில் ஒரு திருமண மண்டபம் மற்றும் மூன்று கடைகளும் உள்ளன. அந்த நிலத்தைப் பயன்படுத்தி வந்த ஜெயசிங் என்பவா், அதை அவரது மனைவி மற்றும் மகள்களுக்கு எழுதித் கொடுத்துள்ளாா்.

சட்ட விரோதமாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்தில் ஜெயசிங்கின் குடும்பத்தினா் கட்டுமானங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனா். எனவே, அந்த நிலத்தை மீட்கவும், ஆக்கிரமிப்பாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் டி.ஹரீஷ்குமாா், பக்தா்கள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட சொத்தை ஆக்கிரமித்துள்ளது சட்ட விரோதம். இது தொடா்பாக ஏற்கெனவே அரசுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது என வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்கவும், மனுதாரா் அளித்த மனு மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருக்கு உத்தரவிட்டாா்.