
விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் இரண்டாவது நாளாக இன்று(அக்.8) காலை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள்
தமிழ்நாடு மின் வாரியத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ள கேங்மேன் பணியாளர்களுக்கு கள உதவியாளர் பதவி மாற்றம் வழங்க வேண்டும், கேங்மேன் பணியாளர்களுக்கு 2019, டிசம்பர் 1 ஆம் தேதி முதல் வழங்கப்பட வேண்டிய 6 சதவிகித ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், கேங்மேன் பணியாளர்களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும், விடுபட்ட கேங்மேன் பணியாளர்கள் அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, காத்திருப்புப் போராட்டத்தை நேற்று (அக்.7) செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.
விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன் இரண்டாவது நாளாக நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) மாநிலச் செயலர் கே. அம்பிகாபதி தலைமை வகித்தார்.
போராட்டம் தொடரும்...
இந்தப் போராட்டத்தில் திட்டக்குழு தலைவர் ஆர்.சேகர், செயலர் ஆர். அருள், பொருளாளர் கண்ணன், கோட்டச் செயலர்கள் ஏ. கன்னியப்பன் (செஞ்சி), கே.ஏழுமலை (கண்டமங்கலம்), அசோக்குமார் (விழுப்புரம்) உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்டத் தலைவர் சேகர் கூறுகையில், “மின் ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எங்கள் கோரிக்கையை ஏற்று அரசு நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இதன் காரணமாக மின் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்படலாம்” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.