
கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு பெண்களிடம் பட்டப் பகலில் நகைப் பறிப்புச் சம்பவம் நடந்துள்ளது.
தங்கம் என நினைத்து கவரிங் நகையை பெண்கள் கழுத்தில் இருந்து அறுத்துச் சென்ற மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள் இரு வேறு பெண்களிடம் தொடர்ச்சியாக நகை பறிப்பில் ஈடுபட்டனர்.
நேற்று காலை 10:30 மணி அளவில் புவனேஸ்வரி (30 ) என்ற பெண் குளத்துப்புதூர் அருகே சென்ற போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் புவனேஸ்வரி கழுத்தில் அணிந்து இருந்த செயினை அறுத்துச் சென்றனர். மேலும் தொடர்ச்சியாக 11.30 மணி அளவில் குளத்துபாளையத்தில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் வழியில் உள்ள கே டி கே மில் அருகே முத்துலட்சுமி (35) என்ற பெண் செல்போன் பேசிக் கொண்டு சென்ற பொழுது அதே மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து முத்துலட்சுமி கழுத்தில் இருந்த நகையை அறுத்துச் சென்றனர்.
இரண்டு பெண்களுமே கவரிங் நகைகளை கழுத்தில் அணிந்து இருந்த நிலையில், தங்க நகைகள் என நினைத்து மர்ம நபர்கள் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து ஆனைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நான்கு பேர் கொண்ட தனிப்படை அமைத்து போலீசார் நகைப் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சியில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் மக்கள் முன்னிலையில், கணவன் - மனைவியை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,நேற்று ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகவே தனியாக சென்ற வெவ்வேறு பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நகைப் பறிப்பில் ஈடுபட்டது பெரும் பரபரப்ரை ஏற்படுத்தி உள்ளது.
பெண்களிடம் நகையை பறித்துச் சென்ற சம்பவங்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கிறது.
இதையும் படிக்க... டிராய் என்ற பெயரில் வரும் ஆள்மாறாட்ட ஐவிஆர் அழைப்புகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.