
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று விளக்கம் அளித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்ததன் காரணமாகவே கூட்டநெரிசல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,
“தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம். கரூருக்கு முன்னதாக 4 மாவட்டங்களில் விஜய் பிரசாரம் செய்திருந்தார்.
அப்போது கூடிய கூட்டத்தை வைத்து கரூரில் எவ்வளவு பேர் கூடுவார்கள் என்று காவல்துறையும் உளவுத்துறையும் அரசுக்கு எண்ணிக்கை அளித்திருக்கும். அதற்கேற்ப பாதுகாப்பு வழங்கியிருந்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கும்.
வேலுச்சாமிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று அதிமுக கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தவெகவுக்கு அந்த பகுதியில் அனுமதி அளித்தது ஏன்? இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே இரவில் 39 உடலுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது எப்படி?, உடற்கூராய்வு செய்ய அவசரம் காட்டியது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு விளக்கம் அளித்து மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “கரூருக்கு பிற பகுதியில் இருந்து மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். 39 உடல்களை 25 பேர் கொண்ட மருத்துவக் குழு மூலம் உடற்கூராய்வு செய்யப்பட்டது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.