
தீபாவளிப் பண்டிகையையொட்டி விமான டிக்கெட்டின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தீபாவளிப் பண்டிகை வருகிற திங்கள்கிழமை கொண்டாடவுள்ள நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் வசிக்கும் வடமாநில மற்றும் தென்மாவட்ட மக்கள் தீபாவளி பண்டிகையை தங்களது சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக தயாராகி வருகின்றனர்.
அந்தவகையில், வியாழக்கிழமை முதலே தங்களது சொந்த ஊர்களுக்கு சென்னையிலிருந்து படையெடுத்துள்ளனர். ரயிலில் முன்பதிவு டிக்கெட்டுகள் கிடைக்காமல் பலரும் தவித்து வரும் நிலையில், ஆம்னி பேருந்து டிக்கெட்டின் விலையும் விமான டிக்கெட் அளவுக்கு உயர்ந்தது பயணிகளை அதிருப்தியடைய வைத்துள்ளது.
இந்த நிலையில்,பேருந்தில் பயணிப்பதற்கு பதிலாக விமானத்தைத் தேர்வு செய்யலாம் என்ற நிலையில், விமானக் கட்டணம் ஜெட் வேகத்தில் மூன்று முதல் நான்கு மடங்கு வரை கடுமையாக உயர்ந்துள்ளது.
தென்மாவட்டங்களைப் பொறுத்தவரையில் சென்னை - மதுரை சாதாரண நாள் கட்டணம் ரூ.3,129- லிருந்து ரூ.17,683 வரையும், சென்னை - திருச்சி சாதாரண நாள் கட்டணம் ரூ.3,608-லிருந்து ரூ.15,233 வரையும், சென்னை - தூத்துக்குடி சாதாரண நாள் கட்டணம் ரூ.3,608-லிருந்து ரூ.17,053 வரையும் உயர்ந்துள்ளது. அதேபோல, சென்னை - கோவை சாதாரண நாள் கட்டணம் ரூ.4,351-லிருந்து ரூ.17,158 வரையும் உயர்ந்துள்ளது.
இதேபோன்று, வடமாநிலங்களுக்கு சென்னையிலிருந்து தலைநகர் தில்லிக்கு ரூ.5,933-லிருந்து ரூ.30,414 ஆகவும், சென்னை - மும்பைக்கு ரூ.3,356-லிருந்து ரூ.21,960 ஆகவும், சென்னை-கொல்கத்தாவுக்கு ரூ.5,293 -லிருந்து ரூ.22,169 ஆகவும், சென்னை-ஹைதராபாத்துக்கு ரூ.2,926 -லிருந்து ரூ.15,309 ஆகவும், சென்னை- கவுகாத்தி, சாதாரண நாள் கட்டணம் ரூ.6,499 -லிருந்து ரூ.21,639 ஆகவும் உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.