
விராலிமலை: விராலிமலை முருகன் மலைக்கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம் வரும் 22ம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது.
9 நாள் நடைபெறும் இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள முருகன் மலைக்கோயில் சிறப்பு பெற்ற தலமாகும். 207 படிகள் கொண்ட இந்த மலைக்கோயிலில் முருகன் ஆறுமுகங்களுடன் வள்ளி, தெய்வானை சமேதராக மயில் மேல் அமர்ந்து முருகன் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
விராலிமலை மலைக் குகையில் தங்கி முருகனை வழிபட்டு வந்த அருணகிரிநாதருக்கு அஷ்டமா சித்தி எனும் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை முருகன் கற்றருளியதாக தல வரலாறுகள் கூறுகின்றன.மேலும் நாரத முனிவருக்கு பாவ விமோசனம் வழங்கியதாக இத்தலத்தின் வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.
பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று கூடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருவதால் கந்தசஷ்டி விழாவை, நிகழாண்டு முன் எப்போதும் இல்லாத வகையில் வெகுவிமரிசையாக கொண்டாட கோயில் நிர்வாகம் மற்றும் மண்டகபடிதாரர்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிகழாண்டுக்கான விழா வரும் 22 ஆம் தேதி காலை கணபதி ஹோமம் நடத்தப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, காப்பு கட்டுதலுடன் காலை 10.30 மணிக்கு கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்குகிறது.
இதனைத் தொடர்ந்து வரும் நாள்களில் தினமும் காலை, மாலை என இருவேளைகளில் சிம்மம், பூதம், நாக வாகனம், மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முருகன் வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
வரும் 25-ம் தேதி கஜமுக சூரன், 26-ல் சிம்மமுக சூரன் உருவில் வந்து முருகனுடன் போர் புரியும் நிகழ்வும் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 27-ந் தேதி (திங்கட்கிழமை) காலை பானுகோபன் வேடத்திலும் மாலை 6 மணிக்கு சூரபத்பநாபன் வேடத்தில் வந்து முருகனுடன் போர் புரியும் சூரசம்ஹாரம் நிகழ்வு கீழரத வீதியில் நடைபெறுகிறது.
சூரனை வதம் செய்த பின் முருகன் தங்க கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதையடுத்து 28-ந் தேதி மலையில் உள்ள முருகனுக்கு திருக்கல்யாணம் வைபோகம் நடக்கிறது.
தொடர்ந்து 29-ம் தேதி திருக்கல்யாண ஊர்வலமும், 30-ம் தேதி ஏகாந்த சேவையுடன் நிகழாண்டுக்கான கந்த சஷ்டி விழா நிறைவடைகிறது
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், சிவாச்சாரியார்கள், மண்டகப்படிதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
மேலும், பக்தர்களின் வசதிக்காக சூரசம்ஹாரம் அன்று தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.