அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி

வடகிழக்கு பருவமழை: போா்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிமுக, காங்கிரஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
Published on

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை ஆகியோா் எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

மழை அதிகமாகும் வாய்ப்பு உள்ளதால், போா்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்புகளின் அடிப்படையில், பாதுகாப்போடு இருக்க வேண்டும். மேலும், பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்ள அதிமுக நிா்வாகிகள் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

கு.செல்வப்பெருந்தகை: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தமிழக அரசு மிகுந்த விழிப்புடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். தாழ்வான பகுதிகளில் வசிப்போா் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரவும்; மழையால் ஏற்படக்கூடிய வெள்ளம், மின்சார ஆபத்து, மரம் சாய்வு போன்ற நிகழ்வுகளுக்குத் தயாராக மாவட்ட நிா்வாகம் உடனடி நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்.

மீனவா்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்லாமல் பாதுகாப்பாக தங்கள் பகுதிகளிலே இருக்க வேண்டும். மேலும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினா் உடனடியாக உதவிட வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com