விராலிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்!

விராவிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விராலிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்!
Published on
Updated on
2 min read

விராவிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விராலிமலை முருகன் மலைக்கோயுலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. 9 நாள் நடைபெறும் இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள முருகன் மலைக்கோயில் சிறப்பு பெற்ற தலமாகும். 207 படிகள் கொண்ட இந்த மலைக்கோயிலில் முருகன் ஆறுமுகங்களுடன் வள்ளி, தெய்வானை சமேதராக மயில் மேல் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

விராலிமலை மலைக் குகையில் தங்கி முருகனை வழிபட்டு வந்த அருணகிரிநாதருக்கு அஷ்டமா சித்தி எனும் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை முருகன் கற்றருளியதாக தல வரலாறுகள் கூறுகின்றன.மேலும் நாரத முனி க்கு பாவ விமோசனம் வழங்கியதாக இத்தலத்தின் வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.

பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மழையின் காரணமாக சம்பிரதாய நிகழ்வாக மட்டுமே சூரசம்ஹாரம் நடத்தப்பட்டது. இதனால் நிகழாண்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று கூடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால் கந்தசஷ்டி விழாவை நிகழாண்டு முன் எப்போதும் இல்லாத வகையில் வெகுவிமரிசையாக கொண்டாட கோயில் நிர்வாகம் மற்றும் மண்டகபடிதாரர்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிகழாண்டுக்கான விழா காலை யாகசாலை பூஜை நடத்தப்பட்டு சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, காப்பு கட்டுதலுடன் காலை 12 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது.

இதனைதொடர்ந்து வரும் நாள்களில் தினமும் காலை, மாலை என இருவேளைகள் நாக வாகனம், பூத வாகனம், சிம்மம், மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முருகன் வள்ளி,தெய்வானை சமேதராக எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

வரும் 25-ம் தேதி கஜமுக சூரன், 26-ல் சிம்மமுக சூரன் உருவில் வந்து முருகனுடன் போர் புரியும் நிகழ்வும் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான 27-ந் தேதி (திங்கள்கிழமை) காலை பானுகோபன் வேடத்திலும் மாலை 6 மணிக்கு சூரபத்பநாபன் வேடத்தில் வந்து முருகனுடன் போர் புரியும் சூரசம்ஹாரம் நிகழ்வு கீழரத வீதியில் நடைபெறுகிறது.

சூரனை வதம் செய்த பின் முருகன் தங்க கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதையடுத்து 28-ந் தேதி மலையில் உள்ள முருகனுக்கு திருக்கல்யாணம் வைபோகம் நடக்கிறது.தொடர்ந்து 29-ஆம் தேதி திருக்கல்யாண ஊர்வலமும், 30-ஆம் தேதி ஏகாந்த சேவையுடன் நிகழாண்டுக்கான கந்த சஷ்டி விழா நிறைவடைகிறது

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், சிவாச்சாரியார்கள், மண்டகப்படிதாரர் கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக சூரசம்ஹாரம் அன்று தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Summary

The Kanda Sashti festival began with the flag hoisting at the Viravimalai Murugan Temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com