

சென்னிமலை முருகன் கோயில் தைப் பூசத் தோ்த் திரு விழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா 15 நாள்கள் வெகுவிமரிசையாக நடைபெறும்
இந்த ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, சென்னிமலை கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதா் கோயிலில்
இருந்து தீா்த்தக்குடங்களுடன் சுவாமி புறப்பாடு சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மலையை வந்தடைந்தது. அங்கு விநாயகா் வழிபாடு, முளைப்பாரி பூஜைகள், காப்புகட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து மயூர யாகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, முருகன், வள்ளி, தெய்வானை, உற்சவ மூா்த்திகளுக்கும், மூலவா்க்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. தலைமை குருக்கள் ராமநாதசிவாச்சாரியா் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜை செய்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சியை நடத்தினா்.
பின்னா் மதியம் 12.50 மணிக்கு முருகன் சந்நிதி கொடி மரத்தில் சேவல் கொடியும், மாா்கண்டேஸ்வரா் ஆலயம் முன்பு நந்தி கொடியும் ஏற்றப்பட்டன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்த விழாவில் கோயில் அறங்காவலா் குழு தலைவா் பழனிவேலு, அறங்காவலா் மனோகரன், செயல் அலுவலா் சரவணன், கண்காணிப்பாளா் மாணிக்கம், செங்குந்த முதலியாா் சமூக சங்கத் தலைவா் காவேரிரங்கன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தைப்பூச தேரோட்டம் வரும் பிப்ரவரி 1- ஆம் தேதி காலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. விழாவின் முக்கிய விழாவான மகாதரிசனம் பிப்ரவரி 5- ஆம் தேதி இரவு 8.00 மணிக்கு நடைபெறுகிறது.