

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இன்று HCC–KEC International நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் ஐந்து மெட்ரோ இரயில் கட்டுமானத் தொழிலாளர்களின் மனிதநேயமிக்க மற்றும் பொறுப்புணர்வுள்ள செயலைப் பாராட்டி பரிசு வழங்கியது.
சமீபத்தில், பூந்தமல்லி பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றில் இருந்து வெளியே வந்த பெண்மணி ஒருவர், எதிர்பாராத விதமாகத் தனது தங்கக் காதணி ஒன்றை சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் தவறவிட்டார்.
இதனை நேரில் கண்ட மெட்ரோ கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் உடனடியாக முன்வந்து வாளிகள் மற்றும் குவளைகளைப் பயன்படுத்தித் தேங்கிக் கிடந்த நீரை வெளியேற்றி, காணாமல் போன காதணிகளை மீட்டெடுத்து, உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். அவர்களின் இந்த தன்னலமற்ற மனிதநேயச் செயல் பொதுமக்களிடமும் ஊடகங்களிடமும் பாராட்டைப் பெற்றதுடன், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் தொழிலாளர்களின் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியது.
இந்த மனிதநேயச் செயலை அங்கீகரிக்கும் விதமாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், HCC–KEC International நிறுவனத்தில் பணிபுரியும் கட்டுமான தொழிலாளர்களான எஸ்.கே. பரிகுல், எஸ்.கே. கலாம், எஸ்.கே. சுமோன், எஸ்.கே. பரியுல் மற்றும் அமீர் ஆகிய ஐந்து பேருக்கும் தலா ரூ.2,000/- ரொக்கப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கியது.
இந்த பரிசுகளை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொதுமேலாளர் எஸ்.அசோக் குமார், (வழித்தடம் மற்றும் உயர்மட்ட கட்டுமானம்) , தொழிலாளர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் HCC–KEC International நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.