

பேட்டரியால் இயங்கும் 38 ஆட்டோக்களை புதுவை துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம் உள்ளிட்டோர் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தினர்.
இதை மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த மகளிர்கள் இயக்குகின்றனர். அவர்கள் முறையாகப் பயிற்சி பெற்று இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இந்த பேட்டரி ஆட்டோக்களை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அழைத்தால் வரும் வகையில் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த செயலிக்குப் பெயர் போன்சூர் இ ரிக்ஷா என்பதாகும். இந்தப் பேட்டரி ஆட்டோக்கள் புதுச்சேரி நகரப் பகுதியில் 10 இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும்.
இதைத் தவிர புதுச்சேரி சாலைகளில் ஏற்கெனவே ஓடும் ஆட்டோக்களைச் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பதிவு செய்து பயணிக்கவும் மற்றுமோர் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்தச் செயலியின் பெயர் நம்ம ஊரு டாக்ஸி. இந்தச் செயலியில் இதுவரை 100 ஆட்டோ ஓட்டுநர்கள் பதிவு செய்து பயணிகளுக்காகக் காத்திருக்கினறனர்.
செயலிகளின் பயன்
புதுவை அரசு சார்பில் நடைமுறைப்படுத்தப்படும் இந்தச் செயலிகளில் சுற்றுலா பயணிகள் பதிவு செய்து பயணம் செய்தால் பாதுகாப்பு, பணம் சேமிப்பு உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும். மேலும், ஆட்டோ ஓட்டுநர்களுக்குத் தொடர்ந்து சவாரி கிடைப்பதால் அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும் என்கிறார் இந்தச் செயலியை வடிவமைத்த விரிச்சுவல் மேஸ் என்ற நிறுவனத்தின் பொதுமேலாளர் சி.டி. ராஜகணபதி.
மேலும், நம்ம ஊரு டாக்ஸி செயலி வாயிலாக எதிர்காலத்தில் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கும், புதுச்சேரியில் இயங்கும் இரண்டு சக்கர வாடகை வாகனங்களையும் இந்தச் செயலியின் கீழ் கொண்டு வர முடியும் என்றும் தொழில்நுட்பம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதையும் புதுவை அரசு விரைவில் கொண்டு வரும் என்றும் அந்த வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.