திமுகவை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி! விஜய் திடீர் அறிக்கை!

தமிழக அரசு நெல்மணிகளைப் பாதுகாத்திருக்க வேண்டாமா? விஜய் வெளியிட்ட அறிக்கை குறித்து...
தவெக விஜய்
தவெக விஜய்
Published on
Updated on
2 min read

தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல மக்கள் விரோத தி.மு.க.ஆட்சிக்கு எதிரானத் தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”தொடர் மழையால். விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்ட நெல்மணிகள் முதல்முறை வீணான போதே துரிதமாகச் செயல்பட்டு மீதமுள்ள நெல்மணிகளைப் தமிழக அரசு பாதுகாத்திருக்க வேண்டாமா?

விவசாயிகள் மீது உண்மையாகவே அக்கறை கொண்டிருக்கும் அரசு என்றால் அது அவர்களின் வாழ்வாதாரத்தைக் காத்து. பொருளாதார ரீதியில் அவர்கள் உயர்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசாக இருக்க வேண்டும். மாறாக, ஏழை விவசாயிகள் தங்களின் கடின உழைப்பின் வாயிலாக விளைவித்தவற்றை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் அவற்றை மழையில் நனையவிட்டு வீணாக்கி, ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் ஒரு அரசை என்னவென்று சொல்வது?

ஏழை விவசாயிகள் தாங்கள் காலங்காலமாகச் செய்து வரும் உழவுத் தொழில் மூலமே விளைவித்த பொருள்களை விற்று அதைப் பணமாக்கித் தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவர்கள் பொருளாதார ரீதியில் வலுவடைய வேண்டும் என்றால் அதற்கு முழு மூலதனம் என்பது விவசாயமும் அதற்கான உழைப்பும் மட்டுமே! ஆனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்று, பணத்தைக் கையில் பார்த்துவிடாமல் தடுப்பதே ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் நோக்கமாக இருந்து வருகிறதா என்கிற ஐயம் ஏற்படுகிறது. இது இந்த ஆண்டு மட்டுமில்லை. ஒவ்வோர் ஆண்டுமே இதுதான் நிலை என்கிறபோது வேதனையாகவும் உள்ளது.

வெற்று விளம்பரத்திற்காக நானும் டெல்டாக்காரன்தான் எனப் பெருமைபேசிவரும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசிற்கு ஏழை விவசாயிகள் சார்பாக நாம் முன் வைக்கும் ஒரு சில வினாக்கள்.

டெல்டா விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகளை உரிய நேரத்தில், உரிய விலைகொடுத்துக் கொள்முதல் செய்யாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை வீணாக்கியதன் கரணம் என்ன?

பருவமழை என்பது ஒவ்வோர் ஆண்டும் பெய்யக் கூடியது. இந்தப் பருவமழையை நம்பியே விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அப்படியிருக்க, அந்தப் பருவமழையினால் விவசாயப் பயிர்கள் மற்றும் விளைநிலங்கள் சேதமடையாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

அதிக மழைப் பொழிவு இருந்தாலும் விவசாய நிலத்தில் பயிர்கள் மூழ்காதபடி போதுமான தண்ணீரைத் தவிர்த்து, அதிகப்படியான தண்ணீர் விவசாய நிலங்களில் இருந்து தானாகவே வெளியேறி, சேமித்து வைக்கப்பட வேண்டிய நீர்நிலைகளைச் சென்றடைய, போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா?

விளைவிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட தானியங்கள் மழையில் நனைந்து வீணாகாமல். நல்லமுறையில் பாதுகாப்பாக சேமித்து வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

ஒவ்வோர் ஆண்டும் நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகின்றனவே, அதைப் பார்த்தாவது, அடுத்த ஆண்டாவது நெல்மணிகள் மழையில் நனையாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எண்ணம் வரவில்லையா? இல்லையெனில் நெல் உள்ளிட்ட தானியங்கள் வீணாகட்டும், விவசாயிகளின் வாழ்வு பாதிக்கப்படட்டும், அதனால் நமக்கென்ன? என்று தெரிந்தே ஒவ்வோர் ஆண்டும் கடந்து போகிறதா இந்த அரசு?

கடந்த சில நாள்களாக பெய்த மழையால், நெல்மணிகள் நனைந்து வீணாகியதற்கும், அதை விளைவித்த விவசாயிகளின் வேதனைகளுக்கும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?

விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகள் இந்த வெற்று விளம்பர திமுக அரசின் அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகி, மூட்டையிலேயே முளைத்துள்ளன. அதைப் போல், தமிழ் நாட்டு மக்கள் மனங்களில் முளைத்து வளர்ந்து செழித்து நிற்கும் அரசு மீதான எதிர்ப்பு இன்னும் வலுவாகி, வெகுஜன மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி!

வடகிழக்கு பருவமழைக் காலம் இன்னும் நீடிக்க உள்ளது. எனவே இனியேனும் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தி, இனி வரும் மழையினால் நெல் உள்ளிட்ட பயிர்கள் வீணாகாமல் தடுக்க வேண்டும். அத்தோடு பருவமழையின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளம்பர செயல்பாடுகளாக இன்றி போர்க்கால அடிப்படையில் உண்மையாகவே மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவத்துக்குப் பிறகு, இரண்டு நாள்கள் கழித்து விஜய் விடியோவொன்று வெளியிட்டு வருத்தம் தெரிவித்திருந்தார். பின்னர், எந்தவொரு அறிக்கையோ கருத்துகளையோ வெளியிடாமல் இருந்த விஜய், பருவமழையின் தாக்கத்திலிருந்து நெல்மணிகளைப் பாதுகாத்திருக்க வேண்டும் என்று இன்று திடீரென அறிக்கையொன்றை விடுத்திருக்கிறார்.

இந்த அறிக்கையில் கரூர் சம்பவத்தில் ஏற்பட்ட பலி குறித்தும், பலியானவர்களின் குடும்பத்தினருடன் நேற்று நடைபெற்ற சந்திப்பு குறித்தும் விஜய் எதுவும் குறிப்பிடவில்லை.

Summary

Tamil Nadu Vetri Kazhagam leader Vijay has said that just as the rice grains sprouted in vain due to continuous rain, the continuous opposition against the anti-people DMK rule will sprout, grow, flourish and send the rulers home.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com