

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோரின் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டதாக விஜய்யை சந்தித்தவர்கள் கூறினர்.
சென்னை மாமல்லபுரத்தில் தவெக தலைவர் விஜய்யை சந்தித்த கரூர் மக்கள் (கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டோர்) கூறுகையில், ``நாங்கள் நிகழ்ச்சி அரங்கினுள் சென்றவுடன், அவர் எங்களை சந்திக்க உடனே வந்தார். நெரிசல் சம்பவத்துக்கு முன்பு நல்ல திடகாத்திரமாகக் காணப்பட்ட விஜய், நேற்றைய சந்திப்பின்போது உடல் மெலிந்த நிலையில் காணப்பட்டார்.
எங்களைக் கண்டவுடன் திடீரென காலில் விழுந்து அழுதார். என்னை மன்னித்து விடுங்கள், என்னால் தான் உங்கள் குடும்பத்தில் இழப்பு ஏற்பட்டு விட்டது என்பன போன்ற எண்ணங்கள் தோன்றுகின்றன.
என் நெஞ்சை அங்கு நடந்த சம்பவம் எப்போதும் உலுக்கிக் கொண்டு இருக்கிறது. உங்கள் குடும்பத்தில் நீங்கள் உறவுகளை இழந்துள்ளீர்கள். அது ஒரு மிகப்பெரிய இழப்பு. அந்த இழப்பினை எப்படி ஈடு கட்டுவது என்று எனக்கு தெரியவில்லை.
எப்போதும் உங்களில் ஒருவனாக இருந்து உங்கள் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுப்பேன். எந்த உதவி வேண்டுமானாலும் நீங்கள் எப்பொழுது கேட்டாலும் உடனே செய்து தர தயாராக இருக்கிறேன்.
உங்கள் குழந்தையின் படிப்பு செலவு, திருமண செலவு போன்ற எந்த செலவுகள் குறித்து கேட்டாலும் உடனே அதற்கு உதவி செய்ய தயாராக இருக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் காப்பீடு பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் என்னென்ன தேவையோ கேளுங்கள் தருகிறேன் எனக் கூறியது எங்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது’’ என்றனர்.
கரூரில் செப். 27 ஆம் தேதியில், விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடந்த 3 நாள்கள் பிறகு, பாதிக்கப்பட்டோரை விடியோ அழைப்பில் தொடர்புகொண்ட விஜய், அவர்களை விரைவில் சந்திப்பதாக உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரை சென்னைக்கு வரவழைத்து, திங்கள்கிழமையில் (அக். 27) ஒரு தனியார் விடுதி அரங்கில் அவர்களைச் சந்தித்துப் பேசினார். இதனையடுத்து, விஜய்யை சந்தித்தபின், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அவர்கள் கரூருக்கு திரும்பினர்.
இதையும் படிக்க: கர்நாடக காங்கிரஸ் - அஸ்ஸாம் பாஜக வார்த்தைப் போர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.