

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகிய இருவரும் ஒரே காரில் பயணித்துள்ளனர்.
விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இன்று(அக். 30) அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகிய இருவரும் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு ஒரே காரில் பயணித்துள்ளனர். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் அவர்களுடன் இணைய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூவரும் இணைந்து சசிகலாவைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஓபிஎஸ்ஸும் செங்கோட்டையனின் இந்த கருத்தை வரவேற்றிருந்தார். இதுதொடர்பாக செங்கோட்டையனை சந்திப்பேன் என்று ஓபிஎஸ் கூறியிருந்த நிலையில், இன்று இந்த சந்திப்பு நடந்துள்ளது.
முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி காரணமாக செங்கோட்டையன் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இபிஎஸ் மீது டிடிவி தினகரனும் அதிருப்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக தலைவர்களின் சந்திப்பு அரசியலில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.