

நடக்கப் போவதைப் பொறுத்திருந்து பாருங்கள்; வருகிற 2026 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வரும் என சசிகலா தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவையொட்டி அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகிய இருவரும் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு ஒரே காரில் பயணித்தனர்.
அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரனும் இவர்களுடன் இணைய உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் பசும்பொன் செல்லும் வழியில் அபிராமம் பகுதியில் உள்ள சாலையில் மூவரும் சந்தித்துப் பேசினர்.
இதைத் தொடர்ந்து ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் மூவரும் பசும்பொன் வந்து மூவரும் ஒன்றாக இணைந்து முத்துராமலிங்கத் தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன்பின்னர் வந்த சசிகலாவும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், சசிகலாவுடன் ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் பேசினார். ஆனால், சசிகலா வருவதற்கு முன்னதாக டிடிவி தினகரன் அந்த இடத்தில் புறப்பட்டுவிட்டார்.
அதைத் தொடர்ந்து அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் (கோர்ட் யார்டு) வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அடுத்து என்ன செய்ய போகிறீர்கள்? என்ற கேள்விக்கு, “நடக்குறது எல்லாமே சர்பிரைஸ்ஸா நடக்கும்” என்று பதிலளித்தார். அதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி எல்லாரையும் துரோகிகள் என்று கூறியிருக்காரே..? இந்தத் துரோகிகளால்தான் கடந்த தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வரவில்லை என்றும் கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு சசிகலா பேசுகையில், “அதிமுக ஆட்சிக்கு வரும், அதை நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசுகையில், “நான் என்ன செய்கிறேன் என பொறுத்திருந்து பாருங்கள். அதிமுக அட்சியை மீண்டும் கொண்டு வருவேன். யார் என்ன நடவடிக்கை எடுத்தாலும் நான் எல்லோரையும் சந்திப்பேன்.
எத்தனை பேரை கட்சியில் இருந்து நீக்க முடியும். எம்.ஜி.ஆரின் மறைவில் இருந்து கட்சியை பார்த்து வருகிறேன். பழைய நிலை அதிமுகவில் திரும்பும். இரண்டாவது முறை ஏற்பட்டுள்ள இப்பிரச்சினையை நிச்சயம் சரி செய்வேன்.
யார் துரோகி என அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களிடம் போய் கேட்டால் தெரியும். அதிமுகவை பொறுத்தவரை இது இரண்டாவது முறை நடக்கும் பிரச்சினை. மீண்டும் அதிமுக இயல்பு நிலைக்கு திரும்பும். நான் கட்சியை ஒன்றிணைக்கும் வேலையை ஏற்கனவே தொடங்கிவிட்டேன். அரசியலில் எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்வது என் பழக்கம் இல்லை.
என்னைப் பற்றி மூத்த தலைவர்களுக்கு தெரியும். பொறுமையாக இருங்கள். ஜெயலலிதாவை திட்டியவர்களைக்கூட நாங்கள் அமைச்சர்களாகவும், அவைத் தலைவர்களாவும் ஆக்கி உள்ளோம். என்னுடைய மூவ் தனியாக தான் இருக்கும். ஆனால் அது தனியாக தெரியும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.