ராமநாதபுரத்தில் மீனவப்பெண் வடவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டபோது வாய் திறவாத மோடி, அம்பத்தூரிலும், ஈரோட்டிலும் தமிழகக் காவலர்களை வடவர்கள் தாக்கியபோது பேசாத பிரதமர் மோடி, வட மாநிலங்களில் மருத்துவம் படிக்கச் சென்ற தமிழ்ப்பிள்ளைகள் வடவர்களால் மர்மமான முறையில் கொல்லப்பட்டபோது கண்டுகொள்ளாத பிரதமர் மோடி, வடமாநிலங்களில் விளையாடச் சென்ற தமிழக கபடி வீரர்கள், வடவர்களால் தாக்கப்பட்டபோது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத மோடி, முன்பதிவு செய்யப்பட்ட தமிழ்நாட்டு தொடர்வண்டி இருக்கைகளை ஆக்கிரமித்து வடவர்கள் அட்டூழியம் செய்தபோது அமைதி காத்த மோடி, ஆந்திரத்தில் 20 தமிழர்கள் அநியாயமாகச் சுட்டுக்கொல்லப்பட்டபோதும், கேரளத்திலும் கர்நாடகத்திலும் தமிழர்கள் தாக்கப்பட்டு அவர்களது உடைமைகள் பறிக்கப்பட்டபோதும், எல்லாவற்றுக்கும் மேலாக இன்றுவரை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும், படகுகள் பறிக்கப்படுவதும், சிறைப்படுத்தப்படுவதும் தொடர்வது குறித்து எந்தவொரு கண்டனமும் தெரிவிக்காத பிரதமர் மோடி, எந்தவொரு குற்றமும் செய்யாத தமிழர்களை மட்டும் வன்முறையாளர்களாக, திருடர்களாகக் கட்டமைப்பது தமிழர்களுக்கு எதிரான இனவெறி பாகுபாடு அன்றி வேறென்ன? இத்தனை காலமும் மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்து பிளந்த பாஜகவும், பிரதமர் மோடியும், இனி அது எடுபடாது என்று தெரிந்தவுடன் வடவர்களின் வாக்குகளைப் பெற இந்தி பேசும் மக்களிடம் இனவெறியைத் தூண்டுகின்றனர்.