அதிமுகவிலிருந்து நீக்கம்! எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது இணைந்தவர் செங்கோட்டையன்!!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள செங்கோட்டையன், எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது இணைந்தவர்
அதிமுக கட்சி அலுவலகம்
அதிமுக கட்சி அலுவலகம்
Published on
Updated on
1 min read

எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோதே அதிமுகவில் இணைந்தவர் செங்கோட்டையன், இவர் கட்சிப் பொறுப்புகளிலிருந்து ஏற்கனவே நீக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகக் கூறி கட்சியிலிருந்து செங்கோட்டையனை நீக்கி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக தலைவர் டிடிவி தினகரனுடன் இணைந்து செங்கோட்டையன் ஒன்றாகச் சென்று மரியாதை செலுத்தியிருந்த நிலையில், அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.

இவர், அதிமுகவின் பல்வேறு பதவிகளையும், தமிழக அரசில் பல துறையின் அமைச்சர் பதவிகளையும் வகித்தவர். அதிமுகவின் ஆட்சிக்குழு தலைவராகவும், கட்சியின் தலைமை செயளலாளராகவும் பதவி வகித்துள்ளார். திமுகவில் எவ்வாறு துரைமுருகன் நீண்ட காலம் எம்எல்ஏவாக இருந்து வருகிறாரோ அவ்வாறு செங்கோட்டையனும் நீண்ட காலமாக தமிழக சட்டப்பேரவையின் எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.

தற்போது, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். 1977ஆம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியிலும், பிறகு 1980, 84, 89ஆம் ஆண்டுகளிலும், 1991, 2006, 2011, 2016ஆம் ஆண்டுகளிலும் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர்.

1991 - 1996ஆம் ஆண்டு வரை, ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். பிறகு வேளாண் துறை அமைச்சராகவும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் பதவிகளை வகித்துள்ளார்.

இடையே, 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சில தனிப்பட்ட பிரச்னைகளால் இவர் அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, அப்போதைய அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவால், கட்சியிலிருந்து ஓரம்கட்டி வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓ. பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு, எடப்பாடி பழனிசாமி முதல்வரான போது, செங்கோட்டையன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரானார்.

1977ஆம் ஆண்டு முதல், 2021ஆம் ஆண்டு வரை நடைபெற்ற பத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் போட்டியிட்டு 9 முறை வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவர். 1996ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவியிருந்தார்.

அண்மைக் காலமாக, அதிமுக கட்சித் தலைமைக்கு எதிராக சில கருத்துகளைக் கூறி வந்ததால், கட்சியின் பொறுப்புகளிலிருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த செங்கோட்டையன், இன்று கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்து அரசியலில் நடக்கும் மாற்றங்கள், தமிழக மக்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவிலிருந்து வெளியறியவர்கள் இணைவார்களா, முக்கிய கட்சியுடன் கூட்டணி வைப்பார்களா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

அரசியல் நோக்கர்களும், அடுத்தகட்ட நகர்வுகளை உற்றுநோக்கி வருகிறார்கள். 2026 பேரவைத் தேர்தலுக்குள் அரசியல் கட்சிக் கூட்டணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் அல்லது திருப்பங்கள் நேரிடலாம் என்றே கணிக்கப்படுகிறது.

Summary

Sengottaiyan, who has been expelled from AIADMK, joined the party when MGR started it.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com