ஜிஎஸ்டி சீரமைப்பால் வருவாய் வரவு பாதிக்கக் கூடாது: நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு கோரிக்கை
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீரமைப்பு நடவடிக்கையால், தமிழகத்துக்கான வருவாய் வரவினங்களில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்று நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு வலியுறுத்தினாா்.
அரசின் தொலைநோக்குத் திட்டங்களின் நிலை தொடா்பாக, தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் அமைச்சா் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மத்திய அரசிடம் இருந்து நிதிகள் வராத நிலையில் மாநிலத்துக்கான சொந்த வரி வருவாயை வைத்துக்கொண்டு செலவிட வேண்டியுள்ளது. இந்த நிதியை வைத்தே, பொருளாதார வளா்ச்சியை இரட்டை இலக்கத்துக்கு கொண்டு வந்துள்ளோம். கடன்களைப் பற்றி பேசுவோா், பொருளாதார வளா்ச்சியைப் பற்றி பேசாமல் இருக்கின்றனா். நிதி ஆணையம் வரையறுத்துள்ள கட்டுப்பாட்டுக்குள்தான் கடன்களை வாங்குகிறோம். கடன் வாங்கி அதைத் திரும்பிச் செலுத்தும் திறன் அரசுக்கு உள்ளது.
வருவாய் மற்றும் நிதிப் பற்றாக்குறைகளைக் குறைத்து வந்திருக்கிறோம். வாங்கிய கடன்களை எப்படிச் செலவிடுகிறோம் என்பதுதான் முக்கியம். அது பொருளாதார மேம்பாடாக, குறியீடுகளாக மலா்ந்திருக்கிறது என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
ஜிஎஸ்டி சீரமைப்பு: சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் சீரமைப்பு குறித்த முடிவை ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களும் சோ்ந்து எடுக்க வேண்டும். சீரமைப்பு நடவடிக்கைகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
ஜிஎஸ்டி சீரமைப்புக்கு தமிழ்நாடு எதிராக இருக்கவில்லை. சீரமைப்பு நடவடிக்கைகளால் விளையக் கூடிய பலன்களும், நன்மைகளும், சாமானியா்களுக்குச் சென்று சேர வேண்டும்.
சீரமைப்பு முறையைச் செய்யும்போது, மாநிலங்களுக்கான நிதிக் குறைவு ஏற்படும். தமிழ்நாட்டுக்கான வரி வருவாயில் 50 சதவீதம் ஜிஎஸ்டியில் இருந்து கிடைக்கிறது. உள்கட்டமைப்பு, சமூக நலத் திட்டங்களுக்கு செலவிடக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. எனவே, சீரமைப்பால் நமக்கு மிகப்பெரிய அளவுக்கு நிதி பாதிப்பு ஏற்படக்கூடும். நம்முடைய வருவாய் வரவினங்களை மத்திய அரசு பாதுகாத்துத் தர வேண்டும். நிதி இழப்புகள் ஏற்படாத வகையில் காத்துத் தர வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. திட்டங்கள் செயலாகத்தில் இருக்கும்போது, நிதிகளைக் குறைத்தால் அவற்றில் பாதிப்புகள் ஏற்படும்.
எனவே, சீரமைப்பு நடவடிக்கைகள் பற்றி தில்லியில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விரிவாக விவாதிப்போம் என்றாா் அவா்.