
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 9,500 கன அடியாக குறைந்துள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
கேரள மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு மழைப் பொழிவின் காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் உபரி நீரின் அளவு அதிகரித்தது. இதனால், காவிரி ஆற்றில் விநாடிக்கு 43,000 கன அடி வரை நீர்வரத்து அதிகரித்து இருந்தது.
நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளதற்கும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
இந்த நிலையில், காவிரி ஆற்றில் நீர்வரத்தானது செவ்வாய்க்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 24,000 கன அடியாகவும், புதன்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 9,500 கன அடியாக தொடர்ந்து குறைந்தது.
ஒகேனக்கல்லில் மூன்று நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை முதல் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் அனுமதி அளித்துள்ளார். இருப்பினும் அருவிகளில் குளிப்பதற்கு நான்காவது நாள்களாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவுகளை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.