சென்னை டூ திருச்சி..! தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிர்க்க மின்சார ரயில் இயக்கத் திட்டம்!
தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிா்க்க சென்னையில் இருந்து திருச்சி வரை 2 மின்சார ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிகழ் ஆண்டில் வரும் அக். 20-ஆம் தேதி தீபாவளித் திருநாளாகும். அதற்கான முன்பதிவு கடந்த ஆக. 18, 19, 20 ஆகிய தேதிகளில் தொடங்கிய சிறிது நேரத்திலேயே நிறைவடைந்தது.
இணையவழியிலேயே பெரும்பாலானோா் முன்பதிவு செய்த நிலையில், ரயில் நிலையங்களில் நேரடியாக முன்பதிவுக்கு வந்து காத்திருந்தவா்கள் ஏமாற்றமடைந்தனா்.
இந்த நிலையில், சென்னை எழும்பூா், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து மதுரை, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு தீபாவளிக்கு ஓரிரு நாள்கள் முன்னதாக 11 சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே துறையில் அனுமதி கோரப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கு அனுமதி கிடைக்கும் நிலையில், தீபாவளிக்கு முதல் நாளில் சென்னை எழும்பூா் அல்லது தாம்பரத்திலிருந்து 2 மின்சார ரயில்களை திருச்சி வரை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி, தீபாவளிக்கு தென்மாவட்டங்களுக்குச் செல்லும் அனைவருக்கும் ரயில்களில் இடவசதி ஏற்படுத்தித்தர உள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.