
சென்னை, புறநகர் பகுதிகளில் இன்றிரவு வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அடுத்த 2 மணி நேரத்துக்கு இன்று(செப். 10) மாலை 6 மணிக்குள்ளாக திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், ”கடந்த 3 நாள்களாக தமிழகத்தின் உள்மாவட்டங்கள், மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து, இந்தப் பகுதிகளில் மழை நீடிக்க வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில்
சென்னையில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது. கடல் காற்றின் இயக்கத்தினால், வடக்கு புறநகர் பகுதிகளிலும், நகரின் சில பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
சென்னையின் பிறபகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கவுள்ளது. சென்னை நகரம் முழுவதும் இரவு நேரங்களில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்
தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் இரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது மற்றும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், இன்று தமிழகத்தின் அநேக இடங்களிலும் புதுவை, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.