வக்ஃபு சட்டம்: முக்கியத் திருத்தங்களுக்குத் தடை - முதல்வர் வரவேற்பு

வக்ஃபு சட்டத் திருத்தம் தொடர்பான உத்தரவுக்கு முதல்வர் வரவேற்பு.
வக்ஃபு சட்டம்: முக்கியத் திருத்தங்களுக்குத் தடை - முதல்வர்  வரவேற்பு
Published on
Updated on
1 min read

வக்ஃபு சட்டத் திருத்தம் தொடர்பான, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததுடன், முக்கியத் திருத்தங்களுக்குத் தடை விதித்துள்ளது.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”தி.மு.க.வும் மற்ற மனுதாரர்களும் வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில், மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள முக்கியத் திருத்தங்களுக்குத் தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று(செப். 15) உத்தரவிட்டுள்ளது.

1) வக்ஃபுக்குச் சொத்தை அளிக்க, 5 ஆண்டு இஸ்லாத்தைக் கட்டாயமாக நடைமுறையில் கடைப்பிடித்திருக்க வேண்டும் எனும் விதிக்குத் தடை

2) வக்ஃபு நிலத்தை அரசு நிலம் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தாலே, உரிய அதிகாரி அறிக்கை அளிக்கும்வரை அல்லது அரசு முடிவெடுக்கும் வரை அச்சொத்தைப் பறிக்கும் அதிகாரத்துக்குத் தடை

3) ‘வக்ஃபு பயனர்’ என்பதை நீக்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கான அதிகாரத்துக்குத் தடை (நீண்டகால மதப் பயன்பாட்டின் அடிப்படையில் வக்பு சொத்துகளாகக் கருதப்படும் சொத்து)

4) மத்திய வக்ஃபு வாரியத்தில் நான்குக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரை சேர்ப்பது, மாநில வக்ஃபு வாரியங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரைச் சேர்ப்பதற்குத் தடை. இதனால், இந்த வாரியங்களில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருப்பது உறுதிசெய்யப்படும்.

மத்திய பா.ஜ.க. அரசு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக, சட்டவிரோதமாகச் செய்துள்ள திருத்தங்களை நீக்குவதை நோக்கிய முக்கிய நகர்வாக இன்றைய நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது.

இந்த சட்டத்திருத்த முன்வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, தி.மு.க. இதனைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள பலரோடு சேர்ந்து வெற்றியும் கண்டுள்ளது. தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசும் மத்திய அரசு வக்ஃபு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்திச் சட்டமன்றத்தில் திர்மானம் நிறைவேற்றி, ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க.வின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், இன்றைய உத்தரவு இஸ்லாமியர்களின் மத உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் உச்சநீதிமன்றம் பாதுகாக்கும் என மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Chief Minister Stalin has welcomed the Supreme Court's order regarding the amendment of the Waqf Act.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com