

தில்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, விடுதலைக்காக பாடுபட்ட முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்கிட வலியுறுத்தியதாக எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
அவர் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து, தேச விடுதலைக்காக பாடுபட்ட தெய்வத் திருமகனார் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவருக்கு இந்தியத் திருநாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கிட வேண்டும் என அதிமுக சார்பில் கடிதம் வழங்கி வலியுறுத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை காலை சென்னையில் இருந்து தில்லி வந்தார். அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி ஆகியோர் வந்தனர். விமான நிலையத்தில் அவர்களை மு.தம்பிதுரை, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுக எம்.பி.க்கள் வரவேற்றனர்.
இரவு 8.10 மணியளவில் தில்லி கிருஷ்ணன் மேனன் மார்கில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இல்லத்தில் அவரை எடப்பாடி பழனிசாமியும், கட்சியின் மூத்த தலைவர்களும் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. அதன் பிறகு, அமித் ஷா, எடப்பாடி பழனிசாமியை தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவர்கள் பேசியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்கிட மத்திய அமைச்சரை சந்திந்தித்ததாக விளக்கம் அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.