

சென்னை பொதுப் போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைக்கும் சென்னை ஒன் செயலியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அறிமுகம் செய்துவைத்தார்.
இந்த செயலியில் புறப்படும் இடத்தையும் சென்றுசேரும் இடத்தையும் குறிப்பிட்டு டிக்கெட் பெற்றால், அதன்மூலம் சென்னை மாநகரப் பேருந்து, மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் பயணம் செய்துகொள்ள முடியும்.
சென்னையில் மாநகரப் பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் ஆகியவை பொதுப் போக்குவரத்து சேவைகளாக உள்ளன. இந்த போக்குவரத்து சேவைகளை நாள்தோறும் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த மூன்று போக்குவரத்து சேவையையும் ஒருங்கிணைத்து ஒரே டிக்கெட் மூலம் பயணம் செய்வதற்காக ’சென்னை ஒன்’ என்ற செயலியை சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் உருவாக்கி வந்தது.
இந்த நிலையில், ’சென்னை ஒன்’ செயலியை மக்கள் பயன்பாட்டுக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை அறிமுகம் செய்துவைத்தார்.
இந்த செயலியில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள 600 பேருந்து நிறுத்தங்கள், 650 பேருந்து வழித்தடங்கள், 3,500 பேருந்துகளின் தகவல்கள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களின் நிறுத்தங்கள் உள்ளிட்ட உள்ளீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், வாடகை கார், ஆட்டோக்களை முன்பதிவு செய்யும் வசதிகளும் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.