
கரூரில் விஜய் பிரசாரத்தில் நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த துயர சம்பவத்துக்கு விஜய் மீது குற்றம் சுமத்துவது தவறு என்றும் கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பாஜக தலைவர் கே. அண்ணாமலை இன்று(செப். 28) அளித்துள்ள பேட்டியில் தெரிவித்தார்.
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்த பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கரூர் மாவட்ட ஆட்சியர் மீதும் காவல் துறை கண்காணிப்பாளர் மீதும் முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் 10 - 15 பேர் எங்காவது உயிரிழக்க நேரிடும்போது, சம்பந்தப்பட்ட அரசுகள் அங்குள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கின்றன. ஆகவே, இங்கும் நடவடிக்கை தேவை. இதன்மூலம், பிற மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்களுக்கு ஒரு எச்சரிகையாக இந்த நடவடிக்கை அமையும்.
விஜய்தான் முதன்மை குற்றவாளி என்ற குற்றச்சாட்டை நாங்கள் ஏற்க மாட்டோம்.
விஜய்யை பார்க்க ஆயிரம், பத்தாயிரம், பத்து லட்சம் பேர் கூட வரலாம். அது மக்களின் உரிமை. அப்படி, வருகை தரும் கூட்டத்துக்கு பாதுகாப்பு தர வேண்டியது அரசின் கடமை.
இவர்களுக்கு நடுவே அரசு ஒரு இடைத்தரகராக அரசு பணியாற்ற வேண்டும். விஜய்க்கும் அனுமதி வழங்கிட வேண்டும்; அதன்பின் அங்கு வரும் மக்களுக்கும் அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
ஆனால், அந்த வேலையை அரசு செய்யவில்லை. மேற்கண்ட இரு விஷயங்களிலும் அரசு தோற்றுவிட்டது. ஒருதலைப்படசமாக, பாரபட்சமாக அரசு சாமானிய மக்களிடமும் விஜய்யிடமும் நடந்து கொண்டுள்ளது.
ஆகவே, மாவட்ட ஆட்சியர் மீதும் காவல் கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.