
கரூர் நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணை வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், செய்தியாளர்களுடன் பேசுகையில் ``தவெக தலைவர் பிரசாரத்தின்போது, ஆம்புலன்ஸ் வருகிறது. அதில் ஆளில்லை; அது எங்கிருந்து வருகிறது என்றும் தெரியவில்லை.
நாமக்கல்லில் இருந்து ஒரு ஆம்புலன்ஸ் அவர்கள் கூட்டி வந்தது என்று அவர்கள் சொன்னார்கள். அதன் பின்னர் வந்த 2 ஆம்புலன்ஸ், எப்படி உள்ளே வந்தது? சம்பவத்துக்கு முன்னர் பேசிக்கொண்டிருக்கும்போது அந்த ஆம்புலன்ஸ் எப்படி வந்தது என்பதுதான் எங்கள் கேள்வி.
அவர் பேசத் தொடங்கியவுடன் லைட் அணைகிறது, போலீஸ் தடியடி நடத்துகின்றனர், செருப்பு வீசுகிறார்கள், ஆம்புலன்ஸ் வருகிறது - இவையெல்லாம் பார்த்தால் சந்தேகம் இருப்பதாக சமூக ஊடகங்களில் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி, இரவோடு இரவாக உடற்கூறாய்வு செய்கின்றனர், 40 ஆம்புலன்ஸ்களை ஸ்டிக்கர் ஒட்டி தயாராக வைத்திருக்கின்றனர், இரவோடு இரவாக முதல்வர் வருகிறார், நிவாரணத் தொகை அறிவிப்பு, தனிநபர் ஆணையம் அறிவிப்பு - இவற்றையெல்லாம் பெருமையாகச் சொல்கின்றனர். இதற்குத்தான் அரசாங்கம் இருக்கிறது; முதல்வர் இருக்கிறார்.
இதே, கள்ளக்குறிச்சியில் 68 பேர் இறந்தபோது, முதல்வர் எங்கே போனார்? ஏன் அவர்களைப் பார்க்கவில்லை; ஆறுதல் சொல்லவில்லை. சென்னை மெரீனாவில் ஏர் ஷோ நெரிசலில் 5 பேர் இறந்தார்கள். அவர்களை ஏன் பார்க்கவில்லை? ஆறுதல் சொல்லவில்லை?
அப்படியென்றால், இரவோடு இரவாக நடப்பவற்றைப் பார்த்தால் சந்தேகம் வருகிறது என்று சமூக ஊடகங்களில் கூறுகின்றனர்.
ஒரு நபர் ஆணையம் விசாரிக்கச் சென்றபோது, பின்னால் இருந்துகொண்டு மிரட்டுகின்றனர். பேசக் கூடாது; வாயை மூடு என்று கையைக் காட்டுகின்றனர். இப்படியிருக்கையில் எப்படி நியாமமான விசாரணை நடக்கும்? அவர்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும் என்பதுதான் பொதுமக்களின் கோரிக்கை’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: கரூர் பலி: தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.