/

சங்கிகளைப்போல வாட்ஸ்ஆப் வதந்திகளை வாந்தியெடுக்கும் பழனிசாமி: மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து பொய்களைக் கூறி வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு

News image

முதல்வர் ஸ்டாலின் - விடியோ க்ளிப்

Updated On :5 ஏப்ரல் 2026, 5:29 am

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து பொய்களைக் கூறி வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

விருதுநகரில் பிரசாரக் கூட்டத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பேசுகையில், தேமுதிகவின் இளைஞரணி செயலாளராகத் துடிப்புடன் செயல்பட்டுவரும் விஜயபிரபாகரனுக்கு, முரசு சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

அவருடைய தந்தையும், என்னுடைய ஆருயிர் நண்பருமான கேப்டன் விஜயகாந்த், மக்கள் ஆணையிட்டால் என்ற படத்தில் வேட்பாளராக நடித்தார். அப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நானும் வருவேன். வேட்பாளரான விஜயகாந்தை ஆதரித்து நான் பாட்டு பாடியிருப்பேன்.

அன்று இவருடைய அப்பாவுக்கு வாக்கு சேகரித்து, திரைப்படத்தில் நடித்தேன். இன்று, இவருக்கு முதல்வராக நேரடியாக வாக்கு கேட்க வந்திருக்கிறேன்.

எதிர்க்கட்சியினர் சாதனைகள் எதனையும் சொல்ல முடியாமல், அவதூறுகளையும் தரம்தாழ்ந்த பேச்சுகளையும் நம்பி பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

பழனிசாமி என்றால், அது பொய்; பித்தன் என்றுதான் வரும். அவர் சொல்லியிருக்கிற பொய்களைக் கொண்டு ஒரு புத்தகமே வெளியிடலாம்.

ஐந்து முறை முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியை பற்றி, பச்சைப் பொய் பேசிய பழனிசாமிக்கு நெல்லையில் நான் பதிலடி கொடுத்துள்ளேன். தான் சொன்ன ஒரு பொய்யிலிருந்து தப்பிக்க அடுத்தடுத்த பொய்களை, கூச்சமேயில்லாமல் கூறத் தொடங்கியிருக்கிறார்.

பெருந்தலைவர் காமராஜர், ஜானகி எம்ஜிஆருக்கு நாம் இடம்தர மறுத்ததாகக் கூறினார்.

சங்கிக் கூட்டணியில் சேர்ந்ததாலேயே, அவர்களைப்போலவே வாட்ஸ்ஆப் வதந்திகளை வாந்தி எடுக்கிறார் பழனிசாமி.

பெருந்தலைவர் காமராஜரின் மறைவின்போது, மகனைப்போல உடனிருந்து இறுதி நிகழ்வுகளைச் செய்தவர் கலைஞர் கருணாநிதி.

ஜானகி அம்மையார் மறைந்த சில நாள்களிலேயே, ராமாவரம் தோட்டத்திலுள்ள எம்ஜிஆரின் இல்லத்தில் ஜானகி அம்மையாரின் படத்தைத் திறந்து வைத்தவர் கருணாநிதி. மக்களால் தூக்கியெறியப்பட்ட பழனிசாமிக்கு இதெல்லாம் தெரியுமா?

அரசு ஊழியர்களை ஆசைவார்த்தை கூறி, திமுக அரசு ஏமாற்றிவிட்டதாக பழனிசாமி பேசியிருக்கிறார். அப்படி ஏமாற்றியிருந்தால், என்னை அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து, எனக்கு இனிப்பு ஊட்டியிருப்பார்களா?

அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் கொடுமைப்படுத்தி, கொச்சப்படுத்தி, அவர்களுக்கு தருகிற ஊதியத்தையும் இழிவுபடுத்திப் பேசுகிற பழனிசாமிக்கு, அவர்களிடமிருந்து ஸ்வீட்டும் கிடைக்காது; ஓட்டும் கிடைக்காது.

நம்முடைய வரிப்பணம் மொத்தத்தையும் வாங்கி, பாஜக அரசு ஆளும் வட மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுக்கிறது. இதனால் ஏற்படுகிற செயற்கையான நிதி நெருக்கடியை மீறி, ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்டவற்றை நாம் நிறைவேற்றியுள்ளோம்.

பழனிசாமி துரோமிழைக்காத தரப்பே இருக்காது. மூன்று வேளாண் சட்டத்தை அறிவித்து, உழவர்களுக்கு துரோகம். பொள்ளாச்சியில் பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்றி, பெண்களுக்கு துரோகம். பாஜகவின் குடியுரிமைத் திருத்தச் சட்டம், வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு கொடுத்து, சிறுபான்மை சமூகத்துக்கு துரோகம்.

கட்சியில் உங்களை வளர்த்துவிட்ட செங்கோட்டையனுக்கு துரோகம். பதவிகொடுத்த சசிகலா, தினகரனுக்கு துரோகம். ஓ. பன்னீர்செல்வத்துக்கு துரோகம். உங்கள் ஆட்சியைக் காப்பாற்றிய முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் தனபாலுக்கே சீட் கொடுக்காமல் துரோகம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்பட்ட பாஜகவை ஜெயலலிதா எதிர்த்தநிலையில், அதே பாஜகவுடன் கூட்டணி வைத்து, ஜெயலலிதாவுக்கும் துரோகம். துரோகத்துக்கு உருவம் கொடுத்தால், அது பழனிசாமிதான் என்று தெரிவித்தார்.

Summary

ADMK Leader Edappadi Palaniswami Spews WhatsApp Rumors: M.K. Stalin Criticizes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.