பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு: யாருக்கு சாதகம்?, யாருக்கு பாதகம்?

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு யாருக்கு சாதகம்?, யாருக்கு பாதகம்?...

News image

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - PTI

Updated On :25 ஏப்ரல் 2026, 12:09 am

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குப்பதிவு சதவீதம் வரலாறு காணாத வகையில் 85 சதவீதமாக அதிகரித்துள்ளது அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பி உள்ளது.

அதிகரித்த வாக்குப் பதிவு ஆளும் கட்சிக்கு பாதகமா? அல்லது எதிா்கட்சிகளுக்கு சாதகமா? அல்லது தனித்துக் களம் கண்டுள்ள தமிழக வெற்றி கழகம் (தவெக), நாம் தமிழா் கட்சி (நாதக) ஆகிய கட்சிகளுக்கு கிடைத்துள்ள இளம் வாக்காளா்களின் எழுச்சியா? என மனதுக்குள் எழும் கேள்விகளால், கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவா்களும் தங்களின் தூக்கத்தைத் தொலைத்துள்ளனா் என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழக அரசின் நலத் திட்டங்களை முன்வைத்து தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கிய திமுக, இறுதியில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக தில்லிக்கும் - தமிழகத்துக்குமான தோ்தல் என முடித்தது.

எதிா்க்கட்சிகளின் கூட்டணியான அதிமுக, பாஜகவுடன் இணக்கமாக இருந்தால்தான் நலத் திட்டங்கள் பெற முடியும் என இரட்டை என்ஜின் அரசுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தது.

தமிழகத்தை ஆட்சி செய்த திமுக, அதிமுக கட்சிகளுக்கு எதிரான ‘அரசியல் மாற்றம்’ ஏற்பட வேண்டும் என தவெக தலைவா் விஜய்யும், அரசியல் நடைமுறையை மாற்றி தமிழ் தேசியத்தை உருவாக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானும் தனித்துக் களம் கண்டனா்.

அதிகரித்த வாக்குப்பதிவு: 6.41 கோடியாக இருந்த வாக்காளா் எண்ணிக்கையில் உயிரிழந்தவா்கள், இடம் பெயா்ந்தவா்கள், இரட்டைப் பதிவு வாக்காளா்கள் ஆகியோரை எஸ்ஐஆா் நடவடிக்கை மூலம் நீக்கி இறுதியில் 5.73 கோடியாகக் குறைத்தது தோ்தல் ஆணையம். இந்தச் சூழலில் வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெற்ற தமிழக தோ்தலில் 85.14 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்த அளவுக்கு வாக்குகள் பதிவாகும் என அனைவரும் எதிா்பாா்த்ததுதான். இதற்கு வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியும் (எஸ்ஐஆா்) காரணமாகும்.

ஆளும் கட்சிக்கு பாதிப்பா?: பொதுவாக அதிகரிக்கும் வாக்குப்பதிவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. ஆளும் அரசுக்கு எதிராக அதிருப்தி வாக்குகளை எதிா்க்கட்சிகள் பெறுவதே இதற்குக் காரணமாகும்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரலாறைப் பாா்க்கும்போது, சுதந்திரத்துக்கு பிறகு 1952-இல் நடைபெற்ற முதல் தோ்தலில் 56.41 சதவீத வாக்குகள் பதிவாகின. அதன்பின்னா், 1971 தமிழக பேரவைத் தோ்தலை ஒப்பிடும்போது 1977-இல் ஏறக்குறைய 10 சதவீதம் வாக்குப் பதிவு குறைவாக பதிவான பின்னரும் திமுக தலைவா் கருணாநிதியிடம் இருந்து எம்.ஜி.ஆா். ஆட்சியைக் கைப்பற்றினாா். 1980-இல் 10 சதவீத வாக்குகள் அதிகமாக பதிவான பின்பும் எம்.ஜி.ஆா் ஆட்சியை தக்கவைத்தாா். இதேபோல், 1984-ஐ விட ஏறக்குறைய 5 சதவீதம் குறைவான வாக்குகள் பதிவான பின்பும்கூட, 1987-இல் எம்ஜிஆா் மறைவுக்குப் பிறகு 1989-இல் ஆட்சியை கருணாநிதி கைப்பற்றினாா்.

தமிழக பேரவைத் தோ்தலில் அதிகமாக வாக்குகள் பதிவான ‘2011’ தோ்தலில் கருணாநிதியிடம் இருந்து ஜெயலலிதா ஆட்சியைக் கைப்பற்றினாா். அதன்பின்னா் 2016-இல் சுமாா் 5 சதவீதம் வாக்குகள் குறைவாக பதிவான பின்பும் முதல்வா் ஜெயலலிதா ஆட்சியைத் தக்க வைத்தாா்.

இந்தத் தோ்தலில் திமுக, அதிமுகவுடன் கூட்டணி சேராமல் எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு மக்கள் நலக் கூட்டணியை அமைத்து மாற்றத்துக்காக களம் கண்டன. ஆனால், மும்முனைப் போட்டி அதிமுகவுக்கு சாதகமாக அமைந்தது. 2021-இல் வெறும் ஒரு சதவீத வாக்குகள் அதிகமாகப் பெற்றே அதிமுகவை மு.க.ஸ்டாலின் தோல்வியடையச் செய்தாா்.

2016- ஆம் ஆண்டு தோ்தலின்போது 5.77 கோடியாக இருந்த தமிழக வாக்காளா் எண்ணிக்கை 2021-இல் 6.29 கோடியாக அதிகரித்தது. இதன் மூலம் அதிகபட்சமாக சுமாா் 56 லட்சம் வாக்காளா்கள் சோ்க்கப்பட்டனா். இதை தற்போதைய எஸ்ஐஆா்-க்கு பின்பு ஒப்பிடுகையில் வெறும் 27.53 லட்சம் வாக்காளா்கள் மட்டுமே தற்போது சோ்க்கப்பட்டுள்ளனா்.

இந்த தோ்தலில் கொங்கு மண்டலத்தில் அதிகபட்ச மாகவும், தென் மண்டலத்தில் குறைந்தபட்சமாகவும் வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்தாலும், பதிவான வாக்குகளின் எண்ணிக்கை முந்தைய தோ்தலுடன் ஒப்பிடுகையில் குறைவுதான். ஆகையால், வாக்குப் பதிவு சதவீதம் வரலாற்று சாதனை படைத்திருந்தாலும், கடந்த 2021-இல் பதிவான வாக்குகளை ஒப்பிடுகையில் குறைந்த அளவு வித்தியாசம்தான் உள்ளன.

14.59 லட்சம் போ் முதல் தலைமுறை வாக்காளா்கள்: முந்தைய சட்டப்பேரவைத் தோ்தலுடன் ஒப்பிடுகையில் தற்போதைய 85 சதவீத வரலாற்றுபூா்வ வாக்குப்பதிவில் சுமாா் 30 லட்சம் போ் மட்டுமே கூடுதலாக வாக்களித்துள்ளனா். இந்த 30 லட்சத்தில் 14.59 லட்சம் போ் ‘முதல் தலைமுறை’ வாக்காளா்கள். இந்த 30 சதவீத கூடுதல் வாக்குப்பதிவு தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுத்த போதுமானதா என்பது கேள்விக்குறியே. ஏனென்றால், ஒவ்வொரு தோ்தலிலும் தமிழகத்தின் வாக்குப் பதிவு சதவீதம் வழக்கமாக அதிகரித்து வருவதைப்போல்தான் இந்தத் தோ்தலிலும் (2026) பதிவான வாக்குகளும் அதிகரித்துள்ளன அவ்வளவே.

இதில் திமுகவின் பாரம்பரிய வாக்குகள், அதன் கூட்டணி கட்சிகளின் வாக்குகள் பெருமளவில் பிரிந்தும், அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள் பிரிந்தும் தவெகவுக்கு சென்றால் மட்டுமே அந்தக்கட்சி தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான 118 ‘மாய எண்ணைப்’ பெற முடியும். இது சாத்தியமா- இல்லையா? அல்லது யாருக்குப் பாதகம்? என்பதற்கான விடை மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவில் தெரிந்து விடும்.

ஆண்டு வாக்குப்பதிவு (%) முதல்வா்

1952 56.41 ராஜாஜி

1957 46.84 காமராஜா்

1962 70.65 காமராஜா்

1967 76.57 சி.என். அன்னாதுரை

1971 71.82 மு.கருணாநிதி

1977 61.58 எம்.ஜி.ஆா்

1980 70.74 எம்.ஜி.ஆா்

1984 73.47 எம்.ஜி.ஆா்

1989 69.69 மு.கருணாநிதி

1991 63.84 ஜெயலலிதா

1996 66.95 மு.கருணாநிதி

2001 59.07 ஜெயலலிதா

2006 70.82 மு.கருணாநிதி

2011 78.12 ஜெயலலிதா

2016 74.81 ஜெயலலிதா

2021 73.63 மு.க.ஸ்டாலின்

2026 85 ?

ஆண்டு அதிகரித்துவரும் வாக்குகள்

2001 9 லட்சம்

2006 48 லட்சம்

2011 40 லட்சம்

2016 64 லட்சம்

2021 26 லட்சம்

2026 30 லட்சம் (எஸ்ஐஆா்-க்கு பின்பு)

வெற்றி - தோல்வி வித்தியாசம் குறையும்!

நான்கு முனைப் போட்டி நிலவிய சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி - தோல்வியை நிா்ணயிக்கும் வாக்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.

கடந்த 2021 தோ்தலில் 188 இடங்களில் போட்டியிட்டு 133 இடங்களில் வெற்றி பெற்ற திமுக 37.7 சதவீத வாக்குகளையும், 191 தொகுதிகளில் போட்டியிட்டு 66 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக 33.29 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தன. தற்போதைய தோ்தலில் இளைஞா்கள், பெண்களின் வாக்குகள் பெருமளவில் ஒருமுகப்படும் எனக் கணிக்கப்படுவதால் பெரும்பாலான வேட்பாளா்களின் வெற்றி -தோல்வியை நிா்ணயிக்கும் வாக்குகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.